Jan 2, 2013

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 3

முந்தைய பகுதிகள்

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 2






சோ வென மழை ஆரம்பித்தது. நமது சென்னையில் மழை பெய்தால் வெள்ளம் வரும். சாலைகளில் தண்ணீர் தேங்கும். ஒதுங்க இடம் இருக்கும். ஆனால் இது போன்ற மலை பகுதிகளில் மண், பாறைகள் வழுக்கும். காட்டு வெள்ளம் வரும். ஒதுங்க இடம் இருக்காது. எப்போது மழை நிற்கும் என தெரியவில்லை. நனைந்து கொண்டே நடக்க தொடங்கினோம். கொண்டு சென்ற பை வேறு நனைந்து, இருக்கும் சுமை போதாதென்று அதுவும் ஒரு பெரிய சுமை ஆனது.

வழிகாட்டி



ஆளரவமற்ற அந்தப் படிக்கட்டுப் பாதை முடிந்து வெறும் கரடுமுரடான கற்களாலான காட்டுவழிப் பாதை ஆரம்பித்தது. மலைப்பாதையில் (இது பாதையே அல்ல. மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் வழிதான்) ஒருமணி நேரம் நடந்தோம். அதில் பாதிதூரம் சென்றதும்,வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்து நிற்கிறது.

இரண்டாவது மலை கற்களாலான காட்டுவழிப் பாதை


கல்மேடை



தொடர்ந்து நடந்து வந்ததாலும், படிகளற்ற பாறைகளினூடாக, மக்கள் நடந்து நடந்து அமைத்த பாதைகளில் ஏறி வந்ததாலும் மூச்சு இரைத்தது. "இந்த மலைப்பிரதேச மூலிகைக் காற்று உடம்பினுள் சென்று வருவதால், உடம்போடு உள்பாகங்கள் சுத்திகரிக்கப்பட்டு வலுவடைகின்றன. நாள்பூராவும் மூச்சுவிட நேரமின்றி உழன்று, உட்கார்ந்து உழைத்து கொண்டிருக்கும் நமக்கு இது மாதிரி மலையேற்றம்தான் சரியான உடற்பயிற்சி. ஆரோக்கியமானதும்கூட’’என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது.


மூன்றாவது மலை




காலை 8:00 மணி அளவில் கடப்பாறைப்படி ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். கடப்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படி என விதவிதமான பெயர்கள் அந்த வளைந்த பாதைகளுக்குப் பெயராக அமைந்திருக்கின்றன.
இரண்டு வழிகள்:- ஒன்று சரிவாக வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுப் பாதை, நடு நடுவில் இரும்பாலான ஏணிகளும் உண்டு. மற்றொன்று, செங்குத்தான பிடிவிட்டுவிட்டால், கயிலாயத்திற்கு டிக்கெட் வழங்கும் கடப்பாறை பாதை. கடப்பாறையை பாறையில் குத்தி சங்கிலி போட்டு இரும்பாலான ஏணிகள் வைத்த, பாறையிலேயே பாதம் வைக்கும் அளவுக்கு செதுக்கிய படிகள் கொண்ட கடப்பாறை பாதை.இந்த இடம் 120 டிகிரி சாய்வாக இருக்கும். இதில் பாறையில் துளை போட்டு கடப்பாறைகளை நட்டு அவற்றை சங்கிலிகளால் பிணைத்திருப்பார்கள். மாபெரும் திரிசூலங்களும், ஆணிகளும், தண்டுக்கால் கம்பிகளுமே நம்மை மேலே பயணிக்க உதவுகின்றன. அந்த சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டு தான் ஏற வேண்டும்.

கடப்பாறைப்படி



தண்டவாளப்படி



 பயணம் தொடரும்....!

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 2

முந்தைய பகுதிகள்

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1


முனிகள்


அடிவார வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருந்தாள். அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்திருந்தனர். பச்சையம்மாளின் ஆசியோடு, மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு  காலை 5.45க்கு மலையேறத்துவங்கினோம்.

பச்சையம்மாள் கோவில் வாசல்

தென்மாதிமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் காட்டு வழிதனில் நடந்து சென்று பார்த்தால் தூரத்தே உயரமாக நிமிர்ந்து சூழ்ந்திருக்கும் பல மலைகளுக்கு நடுவே தனித்துக் காட்சி தருவது பர்வதமலை. பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் (சுமார் 1250 படிக்கட்டுகள்) கட்டப்பட்டுள்ளன.




படிக்கட்டு ஆரம்பிக்கும் இடம்


மேலே திருவல்லிக்கேணி பர்வதமலை பக்தர்கள் சார்பாக மேலே கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் முதல் அனைத்து பொருட்களும் கீழே இருந்துதான் தலைச்சுமையாகக் கொண்டு செல்ல வேண்டும். படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் நிறையப்பைகளில் மணல் கட்டி வைத்திருந்தார்கள். நாங்களும் ஆளுக்கு ஒரு பை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்கே மூச்சு வாங்கியது; மென்பொருள் துறையில் குனிந்து நிமிராமல் உட்கார்ந்தே வேலை செய்தது இங்கே காட்டியது. சிறிது தூரத்தில் மணல் பையை வழியில் வைத்துவிட்டேன். நம்மை போல் நிறைய பேர் முடியாமல் வைத்து இருந்தார்கள். நாம் நமது உடம்பையே தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. காரணம் மலையின் அமைப்பு அப்படி!!! நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது. சுமார் 1250 படிகள் ஏற 1 மணி நேரத்திற்கு மேல் ஆனது. சரவணன் மட்டும் மணல் பைகளை கடைசி வரை கொண்டு வந்தார்.(திருமண வேண்டுதலுக்காக சிரத்தையாக தூக்கி வந்தார்).

முதல் மலை படிக்கட்டுப்பாதை



வழியில் சில இடங்களில் 10 நிமிடம் வீதம் ஓய்வெடுத்தோம்.(அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் கிளம்ப சற்று கஷ்டமாக இருக்கும்). வழியில் சிறிய ஓலைக்குடிசைகளில் உள்ள கடைகளில்( இந்த மலையில் இவை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் போல. இளநீர், பன்னீர் சோடா, பஜ்ஜி, தண்ணீர் பாட்டில், இட்லி எல்லாமே கிடைக்கும்). இந்தக் கடைகள் இல்லாமல் இருந்தால் இம்மலை ஏறுபவர்களுக்கு எந்த ஆகார வசதியும் இல்லாமல் மிகவும் சிரமமாகிவிடும். நாம் எதுவும் தொடவில்லை. மலை ஏறும் போது காலி வயிறுடன் ஏறுவது என்பது நமது குறிக்கோள். இரண்டு காரணங்கள். 1) இயற்கை உபாதைகளை தடுக்கலாம். 2) நடக்க சுமை தெரியாது. மேலும் காலி வயிறுடன் சென்றால் நமது வேண்டுதலை ஆண்டவன் நிறைவேற்றலாம் என்ற நப்பாசை தான். ஹி…ஹி…ஹி

வழியில் நமது நண்பர் ரமேஷ் கேமிராவில் இயற்கை காட்சிகளையும், நடந்து சென்ற பாதைகளையும், நமது மூதாதையர்களையும் (குரங்குகள்) படம் பிடித்துக்கொண்டே வந்தார். பாதி படிக்கட்டுகள் ஏறியபோது நமது NAT க்கு நட்டு கழன்று நாக்கு உலர்ந்து விட்டது. கண்கள் மேலேறிக்கொண்டது. வாந்தி, மயக்கம் வருவதாகவும், தலை சுழற்றுகிறது எனவும் புலம்பத்தொடங்கி நான் மேலே வரவில்லை. நீங்கள் போங்கள். நான் திரும்ப கீழே போகிறேன் என்றார். எனக்கு இவரை விட்டுவிட்டு செல்லவும் விருப்பமில்லை. தனியாக கீழே அனுப்பவும் மனமில்லை. சரவணன், சிறிது Electrol கலந்து கொடுத்து சிறிது ஓய்வெடுக்க சொன்னார். சிறிது நேரத்திற்கு பின்னர் மல்லிகார்ஜீனர் அருளால் துள்ளியெழுந்த மான் போல புறப்பட்டு விட்டார். மெதுவாக பயணம் தொடங்கியது. அடுத்த சோதனையும் ஆரம்பித்தது.


பயணம் தொடரும்....!

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1


சரவணமுத்துக்குமார் ஆகிய நான், பாலகிருஷ்ணன் என்கிற பாலா (நமது வெள்ளிங்கிரி மலை வீசிங் பார்ட்டி தான்), பாலகிருஷ்ணன் என்கிற கிரிஷ் (Tour Organizer. எங்கள் குழுவில் இரண்டு பாலகிருஷ்ணன், ஒரு பாலு..ஆகவே அடையாளத்திற்காக பெயர் சுருக்கம்), திருக்கழுக்குன்றம் சரவணன், NAT என்கிற நடராஜ், கிரிஷ் நண்பர்கள் அருண் மற்றும் ஹரி, கிரிஷ் உடைய அண்ணன் அருள்மணி, அவரது நண்பர் குமார், ரமேஷ், பாலு மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் என நாங்கள் மொத்தம் பதினாறு பேர்

ஏழு முனிகளுடன் எங்கள் குழுவினர்

எங்கள் முதல் திட்டம் 28-டிசம்பர்-2012 (வெள்ளி இரவு) புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி மலை சென்று தரிசித்து விட்டு 31-டிசம்பர்-2012 (திங்கள் காலை) வருவதாக திட்டம். இரயில் பயணச்சீட்டு உறுதியாகாததால் வேனில் செல்லலாம் என முடிவெடுத்த போது சிலர் வேனில் வர விருப்பம் தெரிவிக்காததால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. அடுத்த முறை சதுரகிரி செல்லலாம். இம்முறை பர்வதமலை செல்லலாம் என நமது கிரிஷ் (எ) பாலகிருஷ்ணன் முடிவெடுக்க நாமும் குஷியாக தயாரானோம்.
இம்முறை வெள்ளிங்கிரி மலை வந்த கார்த்திக், சுவாமி, ராம்ஜி சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த முறை வரவில்லை. அதற்கு பதிலாக வேறு சில நண்பர்கள் இணைந்து கொண்டார்கள்.
28-டிசம்பர்-2012 நல்ல வெள்ளிக்கிழமை இரவு 10:30 க்கு அதிசயமாக வேன் டிரைவர் சரியான நேரத்திற்கு வந்தாலும் அருணும், ஹரியும் வர லேட் ஆனதால் இரவு 11:30 அளவில் எங்கள் CSC-PKT, அண்ணா சாலை அலுவலகத்தில் இருந்து என்னுடன் கிரிஷ், NAT, சரவணன், அருண் மற்றும் ஹரி புறப்பட்டோம். வழியில் அருள்மணி அண்ணன், குமார் சார் திருமங்களத்திலும், பாலா MMM Hospital (கலெக்டர்  நகர்  பஸ் ஸ்டாப் ) விலும், ரமேஷ், பாலு மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் கரையாஞ்சாவடியிலும் (இவர்கள் வீடு கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. போன வழியிலேயே இரண்டு மூன்று முறை போனோம்) ஏறிக்கொள்ள எங்கள் பயணம் ஆரம்பமானது. சென்னையில் இருந்து கிளம்பி பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி வழியாக போளூர் சென்று செங்கம் வழியில் தென்மாதிமங்கலம் என்ற கிராமத்தின் எல்லைக்குள் பர்வதமலை அமைந்திருக்கிறது. பர்வதமலைக்கு தென்மாதிமங்கலம், கடலாடி ஆகிய இரண்டு ஊர்களிலும் இருந்து செல்லலாம். ஆரணியில் தேநீர் அருந்திவிட்டு நாங்கள் தென்மாதிமங்கலம் அடிவாரம் செல்லும்போது சுமார் அதிகாலை 4:00 மணி. பிறகு அங்கிருந்த கட்டண கழிவறையில் காலை கடன் முடித்து குளித்தோம்.வேனில் தேவையில்லாத துணிமணிகளை வைத்து விட்டு மலையேற புறப்பட்டோம். (Over Weight உடம்புக்கு (மலையேற) ஆகாது)



பயணம் தொடரும்....!

Nov 30, 2012

சமையல் எரிவாயு... சிக்கனமா பயன்படுத்துவது எப்படி?

னி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ஆறு கேஸ் சிலிண்டருக்கு மேல் தேவைப்படுமெனில், ஒரு கேஸ் சிலிண்டர் 900 ரூபாய் தந்துதான் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குறைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந்துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்த்தலாமா அல்லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப்பையே வாபஸ் வாங்கிவிடலாமா என மத்திய அரசு யோசித்து வருவது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி விறகு அடுப்புக்கு மாறுவது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வேறு என்னதான் மாற்று என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.  

மின்சார அடுப்பு!

மின்சார அடுப்பை பயன்படுத்துவது கேஸ் சிலிண்டருக்கு ஒரு சிறந்த மாற்று. ஒரு கேஸ் சிலிண்டர் குறைந்தது 45 நாள் வருகிறது என வைத்துக் கொள்வோம். ஒரு கேஸ் சிலிண்டர் ரூ.386.50 விலை எனில், சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.8.50 செலவாகும். அதே ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய்க்கு வாங்கினால் ஒரு நாளைக்கு ரூ.16.28 செலவாகும்.மின் அடுப்பின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்குத் தேவையான சாதம், சாம்பார், பொரியல், டீ, பால் காய்ச்சுவது, இட்லி அல்லது தோசை என மூன்று வேளையும் செய்ய ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்கு மின் அடுப்பில் 1,000 வாட் பவரில் வைத்து தொடர்ந்து ஒரு மணி நேரம் சமைத்தால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும்.உங்களின் வீட்டில் அதிகபட்சமாக 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். அதாவது, மின் அடுப்பிற்காக ஒரு மாதத்திற்கு ரூ.180 உங்களுக்குச் செலவாகும். ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,160 செலவாகும். ஆனால், மானியம் மற்றும் மானியமில்லாத விலையில் ஆண்டுக்கு 10 கேஸ் சிலிண்டர் வாங்கினால் 5,251 ரூபாய் செலவாகும். இதனோடு ஒப்பிட்டால் மின் அடுப்புக்கு நீங்கள் செய்யும் செலவு  மிகக் குறைவுதான்.ஆனால், நீங்கள் சொந்த வீட்டில் இருந்தால் மட்டுமே இந்த கணக்கு சரிவரும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு 6 முதல் 8 ரூபாய் தரும்பட்சத்தில், அதற்காகும் செலவை நீங்கள் கேஸ் வாங்கி பயன்படுத்திவிடலாம்.

எலெக்ட்ரிக் குக்கர்!



சாதம், பிரியாணி, பொங்கல் செய்ய மட்டுமே எலெக்ட்ரிக் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இதில், சாதம் வேக குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன. மின் அடுப்புக்குச் செலவாகும் அதே அளவு மின்சாரம்தான் இதற்கும் தேவைப்படும். ஆவியில் வேக வைக்கும் பொருட்களை இதில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

மைக்ரோவேவ் அவன்!



மைக்ரோவேவ் அவன் - இன்று கணிசமான குடும்பங்களில் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில் டீ, காபி போட்டுக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான நேரம் என்பது மிக மிக குறைவாக இருக்கும். ஆனால், இதற்கென இருக்கும் பிரத்யேகமான பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
மாற்று வழிகளைப் பற்றி யோசிப்பது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை பார்ப்போம். காரணம், சில எளிமையான நடைமுறைகளை பயன்படுத்தினாலே அரசு தரும் ஆறு சிலிண்டர்களை வைத்து, ஆண்டு முழுவதையும் ஓட்டிவிடலாம் என்கிறார்கள் ஆயில் நிறுவன அதிகாரிகள்.
அவர்கள் தரும் டிப்ஸ்கள் இதோ உங்களுக்கு:





சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொண்டு அடுப்பை ஆன் செய்வது அவசியம்.

அடிக்கடி ஆஃப், ஆன் செய்வதால்  அதிக கேஸ் செலவாகும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.அகலமான பாத்திரத்தை வைத்து சமைத்தால் எரிபொருள் வீணாகாது.

தண்ணீரை கொதிக்க வைத்து சாதம் வடிக்காமல், குக்கரில் சமைப்பது ஒரு வழி. அதோடு ஒரே குக்கரில் காய்கறி, பருப்பு, அரிசி என தனிதனிப் பாத்திரத்தில் வைத்து சமைக்கலாம். கேஸ் அதிகமாக மிச்சமாகும்.
வெந்நீர் வைப்பதற்கு கேஸ் அடுப்பை பயன்படுத்தக்கூடாது. வெந்நீர் தயாரிக்க என எலெக்ட்ரிக் கொதிப்பான்கள் உள்ளன. அதையே வாங்கி பயன்படுத்தலாம்.
டீ, காபி அடிக்கடி போடுவதற்குப் பதில்,  மொத்தமாகப் போட்டு ஃபிளாஸ்கில் வைத்து குடிக்கலாம்.
ஃபிரிட்ஜில் வைத்திருந்த பால் மற்றும் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து அறை வெப்ப நிலைக்கு வந்தபிறகு சூடுபடுத்தலாம்.