Apr 7, 2013

எனது சதுரகிரி மலை புனிதப் பயண அனுபவம் - 2


முந்தைய பகுதி


எனது சதுரகிரி மலை புனிதப் பயண அனுபவம் - 1


சதுரகிரி அமைப்பு

திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் தாணிப்பாறை என்ற வனப்பகுதி உள்ளது. அங்கிருந்து சுமார் 12 கி.மீ. மலைப்பாதையில் நடந்து சென்றால் சதுரகிரியை அடையலாம். சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில் உள்ளது. சதுரவடிவில் மலை சூழ்ந்திருக்க, அதற்குள்ளே இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எங்களுடைய கும்பல் தாணிப்பாறையில் Tea சாப்பிட்டுவிட்டு, மூலிகை வனம் மூலமாக மலையேற்றம் செல்ல காலை 11 மணியளவில் ஆயத்தமானோம். அங்கிருக்கும் வன அலுவலர் கொண்டு செல்லும் பைகளை சோதனை செய்து பிளாஸ்டிக் பேக்குகளை எடுத்துஅங்கேயே வைத்துவிட்டு செல்லும்படி கூறி நமது முகவரி, தொலைபேசி எண்களை நோட்டில் பதிந்து செல்ல சொல்கிறார்கள். அங்கிருக்கும் போர்டில் புலி, கரடி, காட்டெருமை, யானை, நரி, சாம்பல் அணில் காட்டிற்குள் உள்ளதென மிரட்டுகிறது.

 





மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவ சிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்கினோம்.


ஆசீர்வாத விநாயகர்




செல்லும் வழியில் ராஜயோக காளியம்மன், பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வந்தன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். நாங்கள் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து சென்றோம்.
 

ராஜயோக காளியம்மன்
 
சிறிது தூரம் நடந்ததும் ஒரு சிற்றருவியும்,தண்ணீர் தேங்கி நின்று செல்லுமிடமும் வந்தது. நிம்மதியாக குளித்தோம். பசித்தவர்கள் சாப்பிட்டார்கள். சாப்பாடு கொண்டு வந்த பையை பாலு & கோ ராஜகாளியம்மன் கோயில் அருகே மறந்து வைத்து வந்து விட்டார்கள். கார்த்திக் சத்தம் போட பாலு சென்று எடுத்து வந்தார். அங்கே குரங்குகள் வேறு. மகாலிங்கம் அருளால் எதுவும் ஆகவில்லை.
 

 









வழுக்கு பாறை தாண்டிய பின்பு அங்கிருந்து அரை மணி நேரம் நடக்க, ஓரளவு கற்பாறைகள் நிறைந்த பாதை வழியே வந்தால் செயின் பாறைஎன்ற இடம் வரும். இரண்டு பாறைகள் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும். சில நேரங்களில் தண்ணீர் அதிகம் ஓடும். அதனால் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கடக்கலாம். நாங்கள் செல்லும் போது தண்ணீர் அதிகமில்லை. சிறிது நேரம் ஓடும் நீரில் கால் வைத்து நின்றோம். சில்லென்று இருந்தது

சங்கிலிப் பாறையிலிருந்து ஒரு அரை மணி நேரம் நல்ல ஏற்றம் இருக்கும். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கி இளைப்பாறிச் சென்றோம் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.
 

சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசித்தோம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு
காராம் பசுத்தடம்


இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். ஆகவே நாங்கள் ஏற முயற்சிக்கவில்லை.

கோரக்கர் குகை











இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். ஒரு லிங்கத்தில் சிவனும், ஒரு லிங்கத்தில் விஷ்ணுவும் இருப்பதாக நம்பிக்கை.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன்மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும், என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன், என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.


சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது, தாயையும், தண்ணீரையும் பழிக்கக்கூடாதென்பதால் தண்ணீர் சுத்தமாக இல்லாவிட்டாலும் சிறிது எடுத்து தெளித்துக்கொண்டோம்.



இரட்டை லிங்கம்













நாவல் ஊற்று

 
 

ஓரளவு நாம் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோம். நல்ல ஏற்றம் உள்ள வழியில் பாதை நன்கு கற்கள் அடுக்கி, இரு பக்கங்களும் மரங்கள் நமக்கு தோகை பிடித்திருப்பது போன்று, ஒரு குகை போன்ற தோற்றமும் இருக்கும். நன்கு சில்லென்று இருக்கும். நம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். எவ்வளவு வெயில் இருந்தாலும் அங்கு மட்டும் குளிர்ச்சியாக இருந்த்து. இதை அங்கு சென்று அனுபவித்தால் தான் தெரியும்.

பின்னர், பச்சரிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை தாண்டி, சிறிது நேரம் ஓடும் நீரில் கால் வைத்து நின்றோம். சில்லென்று இருந்த நீரில் மீன்கள் காலை கடித்தது மசாஜ் செய்ததுபோல இருந்தது, கால் வலியெல்லாம் பறந்து போனது.

இந்த ஏற்றம் முடிந்தவுடன் பிலாவடி கருப்பசாமி கோவில்இருக்கும். பலா மரத்தின் அடியில் கருப்பசாமி இருக்கிறார். காலங்கி நாதர் என்ற சித்தர் உலோகங்களை தங்கமாக மாற்றியதாகவும், அந்த தங்கங்களை ஒரு கிணற்றில் வைத்திருப்பதாகவும், அந்த கிணற்றுக்கு கருப்பசாமி தான் காவல் தெய்வம் என்றும் ஒரு நம்பிக்கை.

பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும், என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றில் காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது. நமது விருப்பங்களை எல்லாம் சுந்தரலிங்கரிடம் முறையிடுகிறாராம் பலாமரத்தடி கருப்பர். இவரிடம் விண்ணப்பித்த குறைகள் எல்லாம் தீரும் என்பது திண்ணம்.

இங்கு கருப்பசாமியை தரிசனம் செய்து கொண்டு. அடுத்து சற்று தூரம் சென்றால் ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரியும். இடது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சந்தன மஹாலிங்கம்கோவில் இருக்கும். வலது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சுந்தர மஹாலிங்கம்கோவில் இருக்கும்.

 

வனதுர்க்கை கோயில்

 

பிலாவடி கருப்பு கோயில்

 
 
 
நான், கிரிஷ், சோற்றுச்சித்தர் வெங்கடேஷ், குமார் அண்ணா, அருண் சார் ஆகிய ஐவர் குழு சுந்தர மகாலிங்கம் கோயிலை மதியம் 3:00 மணியளவில் அடைந்தோம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகும்.
இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங்களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன.
 
--பயணம் தொடரும்

2 comments:

கோவை நேரம் said...

பயணம் அருமை..போக வேண்டிய ஆர்வத்தினை தூண்டுகிறது

வேல்முருகன் said...

அழகான பதிவு நானும் அங்கு சென்றுள்ளேன்.