Jan 2, 2013

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 5

 

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 4


திருக்கழுக்குன்றம் சரவணன் (மணப்பெண் தேவை)

  
நண்பர் சரவணன் மேலே ஏறும் போதும் சரி, இறங்கும் போதும் சரி எங்குமே உட்காரவே இல்லை. அவருக்கு கூடிய விரைவில் மல்லிகார்ஜீனர் அருளால் நல்ல மண வாழ்க்கை அமைய எல்லோரும் வேண்டிக்கொண்டோம். வீசிங் பாலா எந்த முக்கலும் முனகலும் இல்லாமல் ஏறி இறங்கி விட்டார். அருண் வழக்கம் போலவே யாரையும் பற்றி கவலைப்படாமல் ஏறும் போதும் இறங்கும் போதும் எல்லோருக்கும் முன் நண்பர் ஹரியுடன் சென்று விட்டார்.

Tour Organiser பாலகிருஷ்ணன் என்கிற கிரிஷ்


Tour Organiser கிரிஷ் இம்முறை மலையேறும் போதும் இறங்கும் போதும் செருப்பு போட்டு கொண்டு வந்தது ஆச்சரியம் (எல்லா மலையும் இறைவன் வாழுமிடம் என கூறுவார்). கிரிஷ் அண்ணன் அருள்மணி அண்ணன் நல்ல உடம்பு. ஆனாலும் அவர் நிறைய முறை பர்வத மலையும் மற்ற சிவ மலைகளுக்கும் சென்று வருவது உடம்பு ஒரு பொருட்டே இல்லை. மனமிருந்தால் மார்கமுண்டு என உணர்த்துகிறது.


ரமேஷ், பாலு இம்முறைதான் எங்களுடன் வருகிறார்கள். அவர்களைப் பற்றி முழுவதாக தெரியவில்லை. கஷ்டப்படாமல் நடந்தார்கள். பாலு கொண்டு வந்த புளியோதரை தான் எங்களுக்கு இரவு உணவு. கொண்டு வந்தது எங்கே வீணாகி வீட்டிற்கு திரும்ப கொண்டு போகவேண்டுமோ என பயந்து கொண்டே வந்தார். நல்ல வேளை காலியாகி விட்டது. அவர் வீட்டம்மாவிடம் அவருக்கு அடி தப்பித்தது.
பக்தி இருந்தால் காரியம் சித்தியாகும் என்பது உண்மைதான். கால்தான் சரியான வலி. ஊன்ற முடியவில்லை. பாதம் பாளம் பாளமாகப் பிளந்து எரிந்தது.
Trip முடித்து மாலை 5:45 அளவில் வேலூர் பொற்கோவில் சென்றால் செம கூட்டம். நின்றால் மூன்று, நான்கு மணி நேரமாகிவிடும் என நினைத்து போகவில்லை. காலும் சரியான வலி வேறு. அருள்மணி அண்ணா, குமார் அண்ணா, அருண், ஹரி மட்டும் உள்ளே Queue வில் சென்று சாமி கும்பிட்டு வந்தார்கள். நாங்கள் வெட்டியாக வேனில் 2 1/2 மணிநேரம் காத்திருந்தோம். பிறகு இரவு 8.30 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு வேனிலேயே பாலு கொண்டு வந்த புளியோதரையை சாப்பிட்டுவிட்டு ஒவ்வொருவரையும் அவர்கள் வீடுகளில் விட்டு விட்டு நான், கிரிஷ், குமார் அண்ணா, அருண் மட்டும் 12:30 மணி அளவில் CSC-PKT அண்ணாசாலை வந்து வேனுக்கு பணம் கொடுத்து விட்டு 1:15 அளவில் வீடு வந்து சேர்ந்தோம்.
மலை ஏறும் அளவிற்கு உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் யாவரும் வாழ்வில் ஒரு முறையாவது இங்கு சென்று இறைவன் அருள் பெற வேண்டுகிறேன். வெறுமனே மலை ஏற / இயற்கையைக் காண ஆர்வமிருப்பவர்களுக்கு பர்வத மலை ஒரு அருமையான இடம், உடல் வருத்தி இறைவனைக் காண்பேன் என்பவர்களுக்கும் பர்வத மலை ஒரு வரப்பிரசாதம் தான் உங்களை வரவேற்கிறது!. எந்த உயரமான மலையைப் பார்த்தாலும் எனக்குத் தோன்றுவது இதுதான்: எந்த உயரமும் அடையக்கூடியதே!

குறிப்புகள் :
  • இம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது
  • அடிவாரத்திலிருந்து மேலே சென்று பூஜை செய்துவிட்டு வர 8 மணி நேரம் போதுமானதாகும். சிலருக்கு அதற்கும் மேலேயே ஆனாலும் ஆகும்.
  • மலைமீது குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது.(இயற்கை உபாதையை கழிக்க கூட இடம் இல்லை)
  • நாமே கீழிருந்து புறப்படும் போது தண்ணீர், குளுகோஸ் பவுடர், பிஸ்கட், பழம், பூஜைப்பொருட்கள் அனைத்தும் வாங்கிச் செல்ல வேண்டும். தேவைப்பட்டால் ஸ்வெட்டர், மலைக்கோட்டு.
  • இரவு நேரத்தில் மலை ஏற இறங்க நினைப்பவர்கள் டார்ச் லைட் கொண்டு செல்ல வேண்டும்.
  • மற்ற மலைகளைவிட ஏறுவதற்கு சற்று கடினமான மலை இது. சில இடங்களில் இரும்பு ஏணியின் மூலம் ஏறிச்செல்லவேண்டும். சாதாரணமாக வீட்டில் உள்ள மாடிப்படியில் ஏறி இறங்க முடியாதவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் இந்த மலைப்பயணத்தை தவிர்த்துவிட்டு அடிவாரத்தில் இருந்தே தரிசனம் செய்வது நல்லது. இருதய நோய் உள்ளவர்களும் இப்படியே தரிசனம் செய்வது நலம். மல்லிகார்ஜுனர் அருள் கட்டாயம் உண்டு.
  • எந்தவொரு மலைப்பயணமாக இருந்தாலும் முன்பின் சென்றவர்கள் உடன் செல்வது நல்லது. அல்லது தெளிவாக புரோகிராம் சார்ட் செய்து கொண்டு பயணப்படுவது நலம்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக யாத்திரைக்கு அந்த மகேசனின் அருள் வேண்டி பிரார்த்தித்துவிட்டு சென்று வருவது நலம்.
  • பர்வதமலை குறித்து கூகுளில் சர்ச் செய்தால் நிறைய விபரம் கிடைக்கும்.

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 4

முந்தைய பகுதிகள்

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 2


எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 3

நாங்கள் கடப்பாறை பாதையை தேர்ந்தெடுத்தோம். உருப்படியாக  ஏறிச் சென்று இறங்க வேண்டுமே என்ற பயம் பிடித்துக் கொண்டது. எல்லாம் வல்ல சிவனை வேண்டிக்கொண்டோம். நண்பர் ஹரி  "கீழே பார்க்காதீர்கள். பாதையை மட்டும் பார்த்துக் கொண்டு நகருங்கள்" என்று கூறினார். கடப்பாரைப்படிகளைக் கடந்தபிறகு ஒரு பெரிய பாறையைச் சுற்றி இரும்பால், தண்டவாளப் பாதை போட்டிருந்தார்கள். பாறையை ஒட்டியே மெதுவாக நடந்து சென்று கடந்து சென்றோம். பாறையின் எதிர்ப்பக்கம் பார்வையைத் திருப்பினால் அதலபாதாளத்தில் நிலப்பரப்பும் மலைத் தொடர்களும் வயிற்றைக் கலக்கியது. மெல்ல மெல்ல மலை ஏறி உச்சியை அடைந்தோம். அங்கு  இரண்டு  கோவில் மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. சுற்றுப் பாதைகள் இருந்தன. ஆஹா என்ன காற்று? என்ன குளிர்? எங்களுக்குக் கீழே வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள், அதனால் ஏற்பட்ட இன்பக் குளிர். ஹோவென சப்தமிடும் காற்றோடு ஏறி வந்த களைப்பை எல்லாம் இயற்கை எடுத்துக்கொண்டது.ஒவ்வொரு வளைவிலும் மலையடிவாரம் விதவிதமான கோணத்தில் கண் கொள்ளாக் காட்சியாக தெரிகிறது.
சூலாயுதம்

திருஅண்ணாமலையார் பாதம்

சற்று தள்ளி நடந்தபோது ஓரிடத்தில் பெரிய சூலாயுதம் ஒன்று பாறையில் நடப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் பாதங்கள் பாறையில் பதிந்திருந்தது. திருஅண்ணாமலையார் பாதம் என்றார்கள். நாம் பயபக்தியோடு வணங்கி கொண்டோம்.
கோவிலைச் சென்றடைந்தால் பூசாரியே இல்லை. நாமாகத் தான் பூஜை செய்ய வேண்டுமாம்.அட!. ஆலயத்தின் உள்ளே கற்பூரம் ஏற்ற வேண்டாம் என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதால் வெளியிலேயே ஏற்றி விட்டோம்.

கோயில் வெளிப்புறத்தோற்றம்



மேலே மூலஸ்தனத்தைப் பார்த்தால், ஸ்ரீமல்லிகார்ஜீனசுவாமியாக சிவபெருமானும், அகிலாண்டேஸ்வரி ஸ்ரீபிரம்மராம்பிகை தாயாராக பார்வதியும் காட்சியளிக்கின்றனர். வினாயகருக்கும் முருகருக்கும் வணக்கம் செலுத்தி விட்டு மல்லிகார்ஜுனர் சன்னதி சென்றோம் அவரையும் வணங்கிய பின்பு ஸ்ரீபிரம்மராம்பிகை அம்பாள் சன்னதியிலும் பயபக்தியோடு வணங்கினோம்.
ஸ்ரீமல்லிகார்ஜீனசுவாமி
         
                   


அகிலாண்டேஸ்வரி ஸ்ரீபிரம்மராம்பிகை

ஒரு புராணக்கதையை இங்கே சொல்லியே ஆக வேண்டும். ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாக பொத்தினாள்.அப்படி பொத்தியது சில நொடிகள்தான்.அதற்குள் பூமியில் பலகோடி வருடங்கள் ஓடிவிட்டன.விஷயமறிந்த சிவபெருமான் உடனே தனது நெற்றிக்கண்ணைத் திறந்து வைத்து பூமிக்கும்,பிரபஞ்சத்துக்கும் ஒளி கொடுத்து காப்பாற்றிவிட்டார். அதனால்,சிவபெருமான் பார்வதியை நீ பூமிக்குப்போய் என்னை நினைத்து கடும்தவம் செய்; அதுதான் உனக்குத் தண்டனை! என அனுப்பியிருக்கிறார். பாவம் பார்வதி விளையாடியது குற்றமாம்.
அதற்குப் பார்வதி, “உங்களை விட்டுப்பிரிந்து என்னால் ஒரு கணம் கூட இருக்க முடியாது.நான் எப்படி?” எனக்கேட்டிட, பார்வதியின் துணைக்கு ஏழு சித்தர்களை அனுப்பி வைத்திருக்கிறார். அவர்கள் அகத்தியர், பராசாசர் உள்ளிட்டோர் தான் பச்சையம்மனின் வாசலில் ஏழு முனியாக அமர்ந்திருக்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 4560 அடிகள் உயரத்தில் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது என விளம்பரப்படுத்துகிறார்கள். திரு அண்ணாமலையைப்போல இந்த பர்வதமலைக்கும் கிரிவலம் உண்டு. கிரிவலதூரம் 26 கிலோமீட்டர்கள் ஆகும்.

பர்வதமலை தோற்றம்


எங்களுக்கு மலையுச்சியை அடைய 4 மணிநேரம் ஆனது. ஆலயவழிபட்டுக்கு பின் சிறிது ஓய்வு எடுத்து நண்பர் பாலா கொண்டு வந்த இட்லி, புதினா சட்னி, தக்காளி சட்னியை ஒரு பிடி பிடித்தோம். பசிக்கு திவ்யமாக இருந்தது. காலை உணவருந்தி விட்டு அங்கே இருந்த திருப்பணிக் கமிட்டி உறுப்பினரிடம் எங்களால் ஆன சிறிது நன்கொடை கட்டட நிதியாக கொடுத்தோம்.

600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. இப்போது மீண்டும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதியுடன் திருவல்லிக்கேணி ஸ்ரீபருவதமலை அடியார்கள் திருப்பணிசங்கம் சார்பாக திருப்பணிகள் நடைபெற இருக்கிறது.  
பின்னர் காலை 10:30 மணியளவில் மேலிருந்து கீழிறங்க ஆயத்தமானோம். மலை ஏறுவதைவிட கீழிறங்குவது சற்று கடினமாக இருந்தது. இரும்புப் படிக்கட்டுப்பாதை, கடப்பாரைப் பாதை  என மறுபடி  அதேபாதை,  ஏறியதை விட இறங்கும் போது சிரமமாக இருந்தது. கீழே அதல பாதாளம். ஆனால் இதுவரை யாருக்கும் இந்த மலையில் எந்தத் தீங்கும் நேர்ந்ததில்லையாம்.

மலையை விட்டு இறங்கும்போதும் வேகமாக ஓடி வர முடியவில்லை; மெதுவாகத்தான் வர முடிந்தது. இறங்குவதற்கும் 3 மணி நேரம் ஆனது. மழை பெய்ததால் வழுக்கல் வேறு. எனக்கு சில விழுப்புண்கள் ஏற்பட்டன. கீழே இறங்கும் போதுதான் தெரிந்தது. இந்த வழியாகவா ஏறிவந்தோம்!!??? என ஆச்சரியம்.

இறங்கும் பாதை
              


                
               









இந்த Trip-ல் NAT (எ) நடராஜ் தான் எங்கள் ஹீரோ. முயன்றால் முடியாதது  இல்லைஎன்பதை நிரூபித்தவர். கீழே இறங்கியவுடன் எல்லோருக்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம் அருகில் உள்ள அவர்கள் உறவினர் வீட்டில் சொல்லி வைத்து அவர் மனைவி, மகன் மூலம் சுடச்சுட நல்ல முறையில் தந்து உதவி எல்லா புண்ணியத்தையும் தட்டிச் சென்றுவிட்டார். இறங்கியவுடன் மனைவி, மகனை பார்த்ததும் உடம்பு முடியவில்லை என கூறி அவர்களுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

NAT (எ) நடராஜ்


பயணம் தொடரும்....!

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 3

முந்தைய பகுதிகள்

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 2






சோ வென மழை ஆரம்பித்தது. நமது சென்னையில் மழை பெய்தால் வெள்ளம் வரும். சாலைகளில் தண்ணீர் தேங்கும். ஒதுங்க இடம் இருக்கும். ஆனால் இது போன்ற மலை பகுதிகளில் மண், பாறைகள் வழுக்கும். காட்டு வெள்ளம் வரும். ஒதுங்க இடம் இருக்காது. எப்போது மழை நிற்கும் என தெரியவில்லை. நனைந்து கொண்டே நடக்க தொடங்கினோம். கொண்டு சென்ற பை வேறு நனைந்து, இருக்கும் சுமை போதாதென்று அதுவும் ஒரு பெரிய சுமை ஆனது.

வழிகாட்டி



ஆளரவமற்ற அந்தப் படிக்கட்டுப் பாதை முடிந்து வெறும் கரடுமுரடான கற்களாலான காட்டுவழிப் பாதை ஆரம்பித்தது. மலைப்பாதையில் (இது பாதையே அல்ல. மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் வழிதான்) ஒருமணி நேரம் நடந்தோம். அதில் பாதிதூரம் சென்றதும்,வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்து நிற்கிறது.

இரண்டாவது மலை கற்களாலான காட்டுவழிப் பாதை


கல்மேடை



தொடர்ந்து நடந்து வந்ததாலும், படிகளற்ற பாறைகளினூடாக, மக்கள் நடந்து நடந்து அமைத்த பாதைகளில் ஏறி வந்ததாலும் மூச்சு இரைத்தது. "இந்த மலைப்பிரதேச மூலிகைக் காற்று உடம்பினுள் சென்று வருவதால், உடம்போடு உள்பாகங்கள் சுத்திகரிக்கப்பட்டு வலுவடைகின்றன. நாள்பூராவும் மூச்சுவிட நேரமின்றி உழன்று, உட்கார்ந்து உழைத்து கொண்டிருக்கும் நமக்கு இது மாதிரி மலையேற்றம்தான் சரியான உடற்பயிற்சி. ஆரோக்கியமானதும்கூட’’என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது.


மூன்றாவது மலை




காலை 8:00 மணி அளவில் கடப்பாறைப்படி ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். கடப்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படி என விதவிதமான பெயர்கள் அந்த வளைந்த பாதைகளுக்குப் பெயராக அமைந்திருக்கின்றன.
இரண்டு வழிகள்:- ஒன்று சரிவாக வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுப் பாதை, நடு நடுவில் இரும்பாலான ஏணிகளும் உண்டு. மற்றொன்று, செங்குத்தான பிடிவிட்டுவிட்டால், கயிலாயத்திற்கு டிக்கெட் வழங்கும் கடப்பாறை பாதை. கடப்பாறையை பாறையில் குத்தி சங்கிலி போட்டு இரும்பாலான ஏணிகள் வைத்த, பாறையிலேயே பாதம் வைக்கும் அளவுக்கு செதுக்கிய படிகள் கொண்ட கடப்பாறை பாதை.இந்த இடம் 120 டிகிரி சாய்வாக இருக்கும். இதில் பாறையில் துளை போட்டு கடப்பாறைகளை நட்டு அவற்றை சங்கிலிகளால் பிணைத்திருப்பார்கள். மாபெரும் திரிசூலங்களும், ஆணிகளும், தண்டுக்கால் கம்பிகளுமே நம்மை மேலே பயணிக்க உதவுகின்றன. அந்த சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டு தான் ஏற வேண்டும்.

கடப்பாறைப்படி



தண்டவாளப்படி



 பயணம் தொடரும்....!

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 2

முந்தைய பகுதிகள்

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1


முனிகள்


அடிவார வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருந்தாள். அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்திருந்தனர். பச்சையம்மாளின் ஆசியோடு, மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு  காலை 5.45க்கு மலையேறத்துவங்கினோம்.

பச்சையம்மாள் கோவில் வாசல்

தென்மாதிமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் காட்டு வழிதனில் நடந்து சென்று பார்த்தால் தூரத்தே உயரமாக நிமிர்ந்து சூழ்ந்திருக்கும் பல மலைகளுக்கு நடுவே தனித்துக் காட்சி தருவது பர்வதமலை. பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் (சுமார் 1250 படிக்கட்டுகள்) கட்டப்பட்டுள்ளன.




படிக்கட்டு ஆரம்பிக்கும் இடம்


மேலே திருவல்லிக்கேணி பர்வதமலை பக்தர்கள் சார்பாக மேலே கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் முதல் அனைத்து பொருட்களும் கீழே இருந்துதான் தலைச்சுமையாகக் கொண்டு செல்ல வேண்டும். படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் நிறையப்பைகளில் மணல் கட்டி வைத்திருந்தார்கள். நாங்களும் ஆளுக்கு ஒரு பை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்கே மூச்சு வாங்கியது; மென்பொருள் துறையில் குனிந்து நிமிராமல் உட்கார்ந்தே வேலை செய்தது இங்கே காட்டியது. சிறிது தூரத்தில் மணல் பையை வழியில் வைத்துவிட்டேன். நம்மை போல் நிறைய பேர் முடியாமல் வைத்து இருந்தார்கள். நாம் நமது உடம்பையே தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. காரணம் மலையின் அமைப்பு அப்படி!!! நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது. சுமார் 1250 படிகள் ஏற 1 மணி நேரத்திற்கு மேல் ஆனது. சரவணன் மட்டும் மணல் பைகளை கடைசி வரை கொண்டு வந்தார்.(திருமண வேண்டுதலுக்காக சிரத்தையாக தூக்கி வந்தார்).

முதல் மலை படிக்கட்டுப்பாதை



வழியில் சில இடங்களில் 10 நிமிடம் வீதம் ஓய்வெடுத்தோம்.(அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் கிளம்ப சற்று கஷ்டமாக இருக்கும்). வழியில் சிறிய ஓலைக்குடிசைகளில் உள்ள கடைகளில்( இந்த மலையில் இவை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் போல. இளநீர், பன்னீர் சோடா, பஜ்ஜி, தண்ணீர் பாட்டில், இட்லி எல்லாமே கிடைக்கும்). இந்தக் கடைகள் இல்லாமல் இருந்தால் இம்மலை ஏறுபவர்களுக்கு எந்த ஆகார வசதியும் இல்லாமல் மிகவும் சிரமமாகிவிடும். நாம் எதுவும் தொடவில்லை. மலை ஏறும் போது காலி வயிறுடன் ஏறுவது என்பது நமது குறிக்கோள். இரண்டு காரணங்கள். 1) இயற்கை உபாதைகளை தடுக்கலாம். 2) நடக்க சுமை தெரியாது. மேலும் காலி வயிறுடன் சென்றால் நமது வேண்டுதலை ஆண்டவன் நிறைவேற்றலாம் என்ற நப்பாசை தான். ஹி…ஹி…ஹி

வழியில் நமது நண்பர் ரமேஷ் கேமிராவில் இயற்கை காட்சிகளையும், நடந்து சென்ற பாதைகளையும், நமது மூதாதையர்களையும் (குரங்குகள்) படம் பிடித்துக்கொண்டே வந்தார். பாதி படிக்கட்டுகள் ஏறியபோது நமது NAT க்கு நட்டு கழன்று நாக்கு உலர்ந்து விட்டது. கண்கள் மேலேறிக்கொண்டது. வாந்தி, மயக்கம் வருவதாகவும், தலை சுழற்றுகிறது எனவும் புலம்பத்தொடங்கி நான் மேலே வரவில்லை. நீங்கள் போங்கள். நான் திரும்ப கீழே போகிறேன் என்றார். எனக்கு இவரை விட்டுவிட்டு செல்லவும் விருப்பமில்லை. தனியாக கீழே அனுப்பவும் மனமில்லை. சரவணன், சிறிது Electrol கலந்து கொடுத்து சிறிது ஓய்வெடுக்க சொன்னார். சிறிது நேரத்திற்கு பின்னர் மல்லிகார்ஜீனர் அருளால் துள்ளியெழுந்த மான் போல புறப்பட்டு விட்டார். மெதுவாக பயணம் தொடங்கியது. அடுத்த சோதனையும் ஆரம்பித்தது.


பயணம் தொடரும்....!

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1


சரவணமுத்துக்குமார் ஆகிய நான், பாலகிருஷ்ணன் என்கிற பாலா (நமது வெள்ளிங்கிரி மலை வீசிங் பார்ட்டி தான்), பாலகிருஷ்ணன் என்கிற கிரிஷ் (Tour Organizer. எங்கள் குழுவில் இரண்டு பாலகிருஷ்ணன், ஒரு பாலு..ஆகவே அடையாளத்திற்காக பெயர் சுருக்கம்), திருக்கழுக்குன்றம் சரவணன், NAT என்கிற நடராஜ், கிரிஷ் நண்பர்கள் அருண் மற்றும் ஹரி, கிரிஷ் உடைய அண்ணன் அருள்மணி, அவரது நண்பர் குமார், ரமேஷ், பாலு மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் என நாங்கள் மொத்தம் பதினாறு பேர்

ஏழு முனிகளுடன் எங்கள் குழுவினர்

எங்கள் முதல் திட்டம் 28-டிசம்பர்-2012 (வெள்ளி இரவு) புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி மலை சென்று தரிசித்து விட்டு 31-டிசம்பர்-2012 (திங்கள் காலை) வருவதாக திட்டம். இரயில் பயணச்சீட்டு உறுதியாகாததால் வேனில் செல்லலாம் என முடிவெடுத்த போது சிலர் வேனில் வர விருப்பம் தெரிவிக்காததால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. அடுத்த முறை சதுரகிரி செல்லலாம். இம்முறை பர்வதமலை செல்லலாம் என நமது கிரிஷ் (எ) பாலகிருஷ்ணன் முடிவெடுக்க நாமும் குஷியாக தயாரானோம்.
இம்முறை வெள்ளிங்கிரி மலை வந்த கார்த்திக், சுவாமி, ராம்ஜி சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த முறை வரவில்லை. அதற்கு பதிலாக வேறு சில நண்பர்கள் இணைந்து கொண்டார்கள்.
28-டிசம்பர்-2012 நல்ல வெள்ளிக்கிழமை இரவு 10:30 க்கு அதிசயமாக வேன் டிரைவர் சரியான நேரத்திற்கு வந்தாலும் அருணும், ஹரியும் வர லேட் ஆனதால் இரவு 11:30 அளவில் எங்கள் CSC-PKT, அண்ணா சாலை அலுவலகத்தில் இருந்து என்னுடன் கிரிஷ், NAT, சரவணன், அருண் மற்றும் ஹரி புறப்பட்டோம். வழியில் அருள்மணி அண்ணன், குமார் சார் திருமங்களத்திலும், பாலா MMM Hospital (கலெக்டர்  நகர்  பஸ் ஸ்டாப் ) விலும், ரமேஷ், பாலு மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் கரையாஞ்சாவடியிலும் (இவர்கள் வீடு கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. போன வழியிலேயே இரண்டு மூன்று முறை போனோம்) ஏறிக்கொள்ள எங்கள் பயணம் ஆரம்பமானது. சென்னையில் இருந்து கிளம்பி பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி வழியாக போளூர் சென்று செங்கம் வழியில் தென்மாதிமங்கலம் என்ற கிராமத்தின் எல்லைக்குள் பர்வதமலை அமைந்திருக்கிறது. பர்வதமலைக்கு தென்மாதிமங்கலம், கடலாடி ஆகிய இரண்டு ஊர்களிலும் இருந்து செல்லலாம். ஆரணியில் தேநீர் அருந்திவிட்டு நாங்கள் தென்மாதிமங்கலம் அடிவாரம் செல்லும்போது சுமார் அதிகாலை 4:00 மணி. பிறகு அங்கிருந்த கட்டண கழிவறையில் காலை கடன் முடித்து குளித்தோம்.வேனில் தேவையில்லாத துணிமணிகளை வைத்து விட்டு மலையேற புறப்பட்டோம். (Over Weight உடம்புக்கு (மலையேற) ஆகாது)



பயணம் தொடரும்....!