May 7, 2014

திருமண நிதியுதவி பெறுவது எப்படி?



திருமண நிதியுதவி பெற யாருக்கு விண்ணப்பிப்பது? எத்தனை நாட்களுக்குள் விண்ணப்பிப்பது?

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே இதன் நோக்கம். கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம். திருமண நிதியுதவி பெற யாருக்கு விண்ணப்பிப்பது? எத்தனை நாட்களுக்குள் கலப்புத் திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிப்பது ஆகிய விவரங்கள் இங்கே...

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)திட்டம் 1- மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம். தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்

தேவையான சான்றுகள்:
* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் - திட்டம் 1.
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று - திட்டம் 2.

யாரை அணுகுவது?
*மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம்.

*தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்
ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
*திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
*திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் :
1)திட்டம் 1- கல்வித்தகுதி தேவையில்லை.
2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

நிபந்தனைகள் :
1)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2)விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
3)மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.
4)மணப்பெண்ணின் தாயிடம் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிட்டால், மணமகள் பெயரில் வழங்கலாம்.

தேவையான சான்றுகள்:
* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் - திட்டம் 1.
* பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற)

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்
தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் :
1)ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டத்திற்கான தகுதிகளே இத்திட்டத்திற்கும் பொருந்தும்.
2)வருமான வரம்பு இல்லை.
3)மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.

தேவையான சான்றுகள்:
1)சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம் அல்லது தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்.
2)விண்ணப்பதாரரின் வயதுச் சான்று.
3)பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).

குறிப்பு: விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். திருமணத்தன்றோ, திருமணத்திற்குப் பிறகோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது மேற்கூறிய மூன்று திட்டங்களுக்கும் பொருந்தும்.

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2- 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)வருமான வரம்பு இல்லை.

4)மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமனின் வயது நாற்பதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
* விதவைச் சான்று
* மறுமணப் பத்திரிகை
* மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்று
* திருமணப் புகைப்படம்
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி, இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)பிரிவு 1- புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து, பிற இனத்தவரை மணந்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.

2)பிரிவு 2- புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

3)திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

4)திட்டம்2-பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு, எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

5)வருமான வரம்பு இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
* திருமணப் பத்திரிகை அல்லது திருமணப் பதிவுச் சான்று
* மணமகன் அல்லது மணமகளின் ஜாதிச் சான்று
* மணப்பெண்ணின் வயதுச் சான்று
* பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).
குறிப்பு : அனைத்துத் திட்டங்களுக்கும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
*சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. http://www.chennaicorporation.gov.in/moovaloor/appl_form_step1.jsp என்கிற இந்த இணைப்பில் சென்று, விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

*விண்ணப்பம் கிடைக்கவில்லையென்றாலோ, விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்கவில்லையென்றாலோ இந்தியன் குரல் அமைப்பை தொடர்புகொள்ளலாம். தொடர்புக்கு: 94443 05581

 

நன்றி: புதியதலைமுறை

 

பிறந்த தேதி, பெயர் மாற்றம் செய்வது, ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் பெறுவது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
 
பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு - சந்திர குமார் என்ற பெயர் சந்திரா குமார் என்றிருத்தல்)

ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம் செய்ய வேண்டுமாயின் அரசிதழில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

கட்டணம்
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ. 415/- மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ. 50/- மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ. 65/-

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாக செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002, என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம் செலுத்தலாம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், ‘என்கிற’ (Alias) என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படிப் பெறுவது?
அரசிதழை நேரில்பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடுமுன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), சென்னை-2 இல் 2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

www.stationeryprinting.tn.gov.in/service_to_public.htm> என்கிற தளத்திற்கு சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

www.stationeryprinting.tn.gov.in/forms.htm> என்கிற தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
 
 
பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?
 
 
பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்ட சிவில்(முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை வைத்து பள்ளி/ கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் மாற்றக் கோரி விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லூரி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பத்தாம் / பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்துக்கு அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி
Government of Tamil Nadu
Directorate of Government Examination
DPI Complex, College Road, Chennai – 600 006
Telephone: +91-44- (0), 28272088
Email: dge@tn.nic.in

கட்டணம் மற்றும் மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.


ஜாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி?


 
தமிழக அரசு தமிழ்நாடு ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாத் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ்.

மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மதம் மாறினால்:
மாணவர்களின் பெற்றோர் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது ஜாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

எங்கே விண்ணப்பிப்பது?
வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்

ஜாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் துணை வட்டாட்சியருக்கும், எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் வட்டாட்சியருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் கோட்டாட்சியருக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.


வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி?


 
ஆண்டு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழே வருமானச் சான்றிதழாகும்.

வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன.

ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் பத்து ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும்.

தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஒட்ட வேண்டியது இல்லை.

விண்ணப்பத்துடன் வருமானத்திற்கான ஆதாரம் குறித்து எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும்.

வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார்.

குறிப்பு:
வருமானச் சான்றிதழ் தவிர ஜாதிச் சான்றிதழுக்கோ எவ்விதக் கட்டணமுமில்லை.

பள்ளி / கல்லூரி ஆரம்பிக்கும் மாதங்களில் விண்ணப்பிக்காமல் முன்னரே விண்ணப்பித்து பெற்றுவைத்துக் கொள்வது நல்லது.



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?


 
இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. அத்துடன் ஆன்லைனில் பதிவு செய்தால் அலைச்சல் மிச்சம். காத்திருக்க வேண்டிய அவசியம் மட்டுமல்ல. நேரமும் வீணாவதைத் தடுக்கலாம். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் கூட தங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவோ, அப்டேட் செய்து கொள்ளவோ செய்யலாம். தளத்துக்குச் செல்ல http://tnvelaivaaippu.gov.in/Empower

பொதுவாக 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்புப் பதிவுக்காக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர். இதனால் காத்திருப்பு, காலதாமதம், நேரம், அலைச்சல் அனைத்துமே தவிர்க்க முடியாததாக இருந்தது. இதனைத் தவிர்க்க அந்தந்தப் பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கும் பள்ளியிலேயே அவர்களின் கல்வித்தகுதி ஆன்லைனில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் பதிவு செய்யப்படும். மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, ஜாதி விவரம், குடும்ப அட்டை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ் எண் ஆகிய விவரங்களை பதிவுசெய்து அப்போதே வேலைவாய்ப்பு பதிவு அட்டையும் கொடுக்கப்பட்டுவிடும்.

இதன்படி ஆன்லைனிலும் ஒரே நேரத்தில் பதிவு செய்யும்போது காலதாமதம் ஏற்படும். இதனைத் தவிர்க்க பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களிடம் முன்கூட்டியே விவரங்கள் பெற்று கணினியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், மதிப்பெண் சான்றிதழ் எண் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் மே 2-ஆம் தேதிக்குள் சேகரிக்க வேண்டுமெனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் அந்த எண்ணை மட்டும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

இதன்படி வெவ்வேறு நாட்களில் பதிவு செய்தாலும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே நாள் பதிவுமூப்பு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 

நன்றி: புதியதலைமுறை


Apr 4, 2014

ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி?

 
வீடு மாறினாலோ, வேலை காரணமாக ஊர் மாறினாலோ நமது ஆவணங்களிலும் முகவரியை மாற்ற வேண்டியது அவசியம். குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில் முகவரியை மாற்றுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

குடும்ப அட்டையில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
முகவரி மாறியவுடன் முதலில் மாற்ற வேண்டியது கேஸ் இணைப்பைத்தான். அதற்கு தற்போது குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தந்தை அளித்து கைப்பட ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் போதும். வீட்டு ஒப்பந்தம், கேஸ் இணைப்பின் ரசீது இவற்றின் நகல்களை இணைத்து குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

எங்கே விண்ணப்பிப்பது?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் எனில் 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அதே மாவட்டத்தில் வேறு ஊரில் கடை மாற்றம் செய்யவேண்டுமெனில் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுகா முகவரி மாற்றம் 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

தாமதமானால் என்ன செய்ய வேண்டும்?
வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளரிடமும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்ய வேண்டும் அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும் அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்கிற எண்ணில் தொலைபேசியிலோ, consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு,

எங்கே விண்ணப்பிப்பது?
வேறு வாக்காளப் பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம் 8 A –ஐ பயன்படுத்தவேண்டும்.

மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPIC_CENTRE_ADDRESS.pdf என்கிற இத்தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்ற: தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, இத்துடன் முந்தைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் என்.ஓ.சி. (‡No objection Certificate) ) வாங்கி இணைக்க வேண்டும்.

எங்கே விண்ணப்பிப்பது?
ஓட்டுநர் உரிமத்தில் தனது பெயரையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, பிறந்த தேதியையோ, முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால் அதற்கான சான்றையும், ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பமும் எழுதிக் கொடுத்தால் போதும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I / II அவர்களிடம் நேரில் கொடுக்க வேண்டும்.

கட்டணம்:
கட்டணம் 315 ரூபாய்தான்.

வங்கிக் கணக்கில் முகவரி மாற்ற : தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது.

எப்படி விண்ணப்பிப்பது?
கணக்கு இருக்கும் வங்கிக்குச் சென்று வங்கிக் கிளையை மாற்றம் செய்து தரக் கோரி ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பித்தால் போதும், உங்கள் வங்கிப் புத்தகத்தில் அந்தக் கிளையின் பெயரை எழுதிக் கொடுத்துவிடுவார்கள். பின்னர் அந்தப் புத்தகத்துடன் எந்த வங்கிக் கிளைக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அங்கு சென்று கணக்குப் புத்தகத்தைக் கொடுத்து, தேவையான ஆவணங்களையும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஒரு வாரம் முதல் 15 நாட்களுக்குள் மாற்றம் செய்து தந்துவிடுவார்கள்.

ஆதார் அட்டையில் முகவரி மாற்ற :
ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை. http://uidai.gov.in/update-your-aadhaar-data.html என்கிற இத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் வழியாக அப்டேட் செய்துகொள்ளலாம். தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்னும் நிரந்த மையம் அமையாததால் தபாலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் அனுப்பலாம். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: http://uidai.gov.in/images/application_form_11102012.pdf

தமிழில் விண்ணப்பம் அனுப்ப :
UIDAI Regional Office
Khanija Bhavan, No.49, 3rd Floor,
South Wing Race Course Road, Bangalore - 01080-22340862

ஆங்கிலத்தில் விண்ணப்பம் அனுப்ப:
UIDAI Regional Office,
5th 7th Floor, MTNL Building,
B D Somani Marg, Cuff Parade, Mumbai – 400 005
022 - 22186168

மேலும் விவரங்கள் பெற: 1800-300-1947, help@uidai.gov.in

பாஸ்போர்ட்டில் முகவரி மாற்ற :
எல்லா ஆவணங்களையும் மாற்றிவிட்டு இறுதியாக பாஸ்போர்ட் முகவரியை மாற்ற வேண்டும். ஏனெனில் பாஸ்போர்ட் முகவரி மாற்றத்துக்குத் தேவையான ஆவணங்கள் அதிகம்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை.

எங்கே விண்ணப்பிப்பது?
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் விண்ணப்பிக்கலாம் இவற்றுக்கு ஃபார்ம் 2 - ஐ பயன்படுத்த வேண்டும். (பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சிறு திருத்தங்கள் மேற்கொள்ள, பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை).

கட்டணம்:
இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆவணங்களில் முகவரியை மாற்ற விரும்புவோர் கவனத்திற்கு
  • புதிய முகவரிக்கு ஆவணங்களை மாற்றும்போது முதலில் ஓர் ஆவணத்தில் முகவரியை மாற்றி, பின்னர் மற்ற ஆவணங்களை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும்.
  • முதலில் கேஸ் இணைப்பை மாற்றிவிட வேண்டும். பின்னர் அதை வைத்து குடும்ப அட்டையையும், குடும்ப அட்டையை வைத்து மற்ற ஆவணங்களையும் மாற்றிவிட்டு கடைசியாக பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • சில இடங்களில் நீங்கள் கொடுக்கும் ஆவணங்களுடன் கூடுதல் ஆவணம் கேட்டால் நோட்டரி பப்ளிக் வாங்கிக் கொடுக்கலாம்.
 
நன்றி: புதியதலைமுறை

Mar 10, 2014

பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி?


ஒருவர் தமது சொத்தை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடமிருந்து வாங்கினாலோ அல்லது வேறு ஒரு பெயருக்கு மாற்றினாலோ அதை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். இரண்டு தனி நபர்களுக்கிடையே நடக்கும் விற்பனை நடவடிக்கையை பத்திரப்பதிவு செய்வது முதல் நடவடிக்கை எனில், அதனை அரசு அங்கீகரித்து அளிப்பதே பட்டா பெயர் மாற்றம்.

பட்டா உள்ள நிலம், கட்டிடம், காலி மனை, விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் வாங்கப்படும்போது, அவற்றை விலை கொடுத்தோ, சொத்து வாரிசு உரிமைப்படியோ, பாகப்பிரிவினை பத்திரப்படியோ, உயில் ஆவணத்தின்படியோ வாங்குபவர் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? யாரை அணுகுவது? விரிவான விவரங்கள் இங்கே.



பட்டாவில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். இதில் உரிமையாளர் பெயர், பட்டா எண், ஊரின் பெயர், மாவட்டத்தின் பெயர், புல எண் (survey number), உட்பிரிவு (sub division), நிலத்தின் பரப்பு, தீர்வை, நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா போன்ற விவரங்களை உள்ளடக்கியிருக்கும்.


எங்கே விண்ணப்பிப்பது?

சொத்தின் எல்லைக்குட்பட்ட வட்டாட்சியரிடமோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடமோ விண்ணப்பிக்கலாம். நேரில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் ஒப்புகைச் சீட்டு வாங்கி வைத்துக் கொள்வது அவசியம். அப்படி ஒப்புகைச் சீட்டு தராத பட்சத்தில் விண்ணப்பத்தை அஞ்சல் ஒப்புகையுடன் பதிவுத் தபாலில் அனுப்பிவிட வேண்டும்.


கட்டணம் எவ்வளவு?

பட்டா மாற்றத்திற்கு அதன் உட்பிரிவினைப் பொறுத்து 80 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.


எப்படி விண்ணப்பிப்பது?

பத்திரப்பதிவு செய்து, 15 நாட்களில் பட்டா மாறுதலுக்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு, ‘நான் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒளிநகல் பத்திரத்தில் உள்ள நிலத்தைக் கிரயம் பெற்றேன். நான் கிரயம் பெற்ற நிலத்தை என் பெயரில் பட்டா மாற்றம் செய்திட/ உட்பிரிவு செய்து தனிப்பட்டா அளித்திட வேண்டுகிறேன்’ என்று விண்ணப்பத்தைப் பதிவஞ்சலில் ஒப்புதல் அட்டையுடன் அனுப்பிவிட வேண்டும். இத்துடன் பத்திர ஆவணங்களின் நகலை இணைக்க வேண்டும்.


எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?

சாதாரண பட்டா மாற்றத்திற்கு 15 நாட்களிலும், உட்பிரிவு செய்யவேண்டிய பட்டா மாற்றத்திற்கு 30 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும்.


பட்டாவின் அவசியம்

  • ஒருவரிடமிருந்து மற்றொருவர் நிலமோ, கட்டிடமோ விலை கொடுத்து வாங்கும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்படும். பத்திரப்பதிவுக்குப் பின் வாங்கியவர், தமது பெயருக்கு பட்டா மாறுதல் செய்துகொள்ள வேண்டும்.

  • ஏனெனில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் நில ஆவணங்கள் இருப்பதால் பத்திரப்பதிவு நகலை வைத்து உரிய கட்டணம் செலுத்தி, தன் பெயருக்கு மாற்றித் தர விண்ணப்பிக்க வேண்டும்.

  • வட்டாட்சியரிடமிருந்து சம்பந்தப்பட்ட நில அளவையாளருக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட அவர், நிலத்தை நேரில் சென்று அளந்து, ஆவணங்களில் தேவையான மாறுதலைச் செய்து, பட்டா மாற்றம் செய்து வழங்குவார்.

  • வங்கிகளில் விவசாயக் கடன் பெற, நகைக் கடன் பெற, பத்திரப்பதிவு செய்ய, அரசின் நலத்திட்டங்களைப் பெற, இயற்கைச் சீற்றங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்போது வெள்ள அல்லது வறட்சி நிவாரணம் பெற... இப்படிப் பல அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கு பட்டா அவசியமாகிறது.

ஆவணங்களின் நகல்களைப் பெற...

பட்டா மாற்றத்திற்குப்பின் அடங்கல், சிட்டா, அ பதிவேடு, நிலவரைபடம் ஆகிய ஆவணங்களின் நகல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பித்துப் பெறுவது என்பதை விளக்குகிறார் தகவல் உரிமைச் சட்ட பயிற்றுநர் எம்.சிவராஜ்.


‘எனக்கு சாதாரண பட்டா மாற்றம் ---- தாலுகா ---- கிராம ------ புல எண்ணில் அளிக்கப்பட்டது. இது குறித்துப் பதிவுகள் செய்யப்பட்ட சிட்டா, அடங்கல் நகல் அளிக்க வேண்டுகிறேன்.’


‘எனக்கு உட்பிரிவு தனிப்பட்டா ---- தாலுகா ---- கிராம ------ புல எண்ணில் அளிக்கப்பட்டது. இது குறித்துப் பதிவுகள் செய்யப்பட்ட சிட்டா, அடங்கல், அ பதிவேடு, நிலவரைபடம் ஆகியவற்றின் ஒளிநகலை அளிக்க வேண்டுகிறேன்.’


குறிப்பிட்ட 15/30 நாட்களுக்குள் பட்டா மாற்ற ஆணைகள் வராவிடில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


மேலும் விளக்கம் பெற : 94434 89976


பட்டா பெயர் மாற்றம் செய்தபின் கவனிக்க வேண்டியவை:

  • ஒரு சொத்தை வாங்கியபின் பின்னால் ஏதும் பிரச்சினைகள் வராமலிருக்க, வருவாய்த் துறையின் கீழிருக்கும் பதிவுத்துறையில் கீழ்க்கண்ட பதிவேட்டின் நகல்களைப் பெற்று வைத்திருப்பது அவசியம். இதனை வைத்து ஒரு சொத்து ஒருவரின் பெயரிலிருந்தால் அது அரசுப் பதிவேடுகளில் எங்கெங்கு பதிவாகியிருக்கும் எனத் தெரிந்துகொள்ளலாம்.

  • சிட்டா - குறிப்பிட்ட கிராமத்தில் ஒரு நபருக்கு எவ்வளவு நிலமிருக்கிறதென அரசு வைத்திருக்கும் பதிவேடு இது. இதிலும் பட்டாவில் உள்ள விவரங்களைப் போல உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம்? அது பயன்பாட்டில் இருக்கிறதா? தீர்வை கட்டப்பட்டுள்ளதா போன்றவை அடங்கியிருக்கும்.

  • அடங்கல் - ஒரு கிராமத்தின் மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் பட்டா எண், நிலத்தின் பயன்பாடு, சர்வே எண்ணுக்குரிய நிலத்தின் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

  • அ பதிவேடு - பட்டா எண், பதிவு பெற்ற உரிமையாளர் பெயர், பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், சர்க்கார்(ச) அல்லது இனாம்(இ), ரயத்துவாரி(ர), நன்செய்(ந), புன்செய்(பு), மானாவாரி(மா), தீர்வு ஏற்படாத தரிசு(தீ.ஏ.த.), புறம்போக்கு ஆகியவை அடங்கியிருக்கும்.

  • நிலத்தின் வரைபடம் - சர்வே எண், நிலத்தின் வடிவம், நீள அகலம் ஆகியவற்றைக் காட்டும்.

  • பட்டா மாற்றம் மட்டுமே முழுமையானதல்ல. சாதாரண பட்டா மாற்றமெனில் அடங்கல், சிட்டா ஆகியவற்றிலும், உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாமாற்றமெனில் அடங்கல், சிட்டா, அ பதிவேடு, நிலவரைபடம் ஆகியவற்றிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே பட்டா மாற்றம் முடிந்ததும் மேற்சொன்ன பதிவேடுகளின் நகல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே பாதுகாப்பானது.

  • விரைவுப் பட்டா மாற்றம் உத்தரவிலும் கூட அந்தக் கிராம ஆவணங்களில் இதன் மாற்றம் குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்.

 

        நன்றி: புதியதலைறை