Apr 7, 2013

எனது சதுரகிரி மலை புனிதப் பயண அனுபவம் - 3

 
 
 
 
 


நாங்கள் ஐவரும் சுந்தரமூர்த்தி கோயில் வந்து சாமி கும்பிட்டுவிட்டு காளிமுத்து சித்தர் மடத்தில் அன்னதானத்தில் வந்தமர்ந்தோம். வயிறார திருப்தியாக சாப்பாடு கிடைத்தது. நமது சோற்றுச்சித்தர் வயிறு போதும் என்கிற அளவிற்கு உண்டார். உண்ட கழைப்பு தொண்டனுக்கும் உண்டல்லவா? நடந்த கழைப்பு வேறு. ஆசிரம வாயிலில் சிறிது அமர்ந்தோம். 4 மணி அளவில் பாலா வந்தார். காளிமுத்து மடத்தில் அன்னம் முடிந்துவிட்டது. அவர் அருகில் உள்ள வேறு மடத்திற்கு சென்று உணவருந்தி வந்தார்.

சுந்தரமூர்த்தி சந்நிதி வரலாறு: கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது. அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

சுந்தர மகாலிங்கம்

 
மாலை சுமார் 4:30 மணி அளவில் சுந்தர மகாலிங்கம் கோயிலில் பூஜை நடந்தது. நாங்கள் திருப்தியாக சுந்தர மகாலிங்கத்தை மனதார வேண்டிக்கொண்டோம். தேனில் குழைத்த தினை மாவும், சர்க்கரை பொங்கலும் பிரசாதமாக கிடைத்தது. சிறிது நேரத்திலேயே கோயில் சாத்தப்பட்டது. 6:00 மணிக்கு அடுத்த பூஜை என்றார்கள். பிறகு நமது குழுவினர் ஒருவர் ஒருவராக வரத்தொடங்கினார்கள். ஆனாலும் அவர்களுக்கு உணவும், தரிசனமும் உடனடியாக கிடைக்கவில்லை.
 
 
 
 
பார்வதி பூஜித்த லிங்கம்: சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய் விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை: சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

மாலை 5:30 மணிஅளவில் ‘சித்தர் தோரண வாயில்’ – கோவிலின் முகப்புக்கு வந்து விட்டோம். இங்கு பதிணெண் சித்தர்கள் சிலை இருக்கின்றது. பதினெட்டு சித்தர்களுக்கும் ஒரே இடத்தில் சிலை இருப்பது இங்கு மட்டும் தான் – இது ஒரு தனி சிறப்பு. எதிரே நவக்கிரகங்கள் இருக்கிறார்கள். அருகில் சட்ட நாதர் குகை இருக்கிறது. அதன் அருகில் ஒரு இடத்தில் நீள் வட்டமான அமைப்பில் மூன்று கம்பிகளை வைத்து சமையல் செய்கிறார்கள். அதில் இருந்து விழும் சாம்பலை திருநீறாக வழங்குகிறார்கள்.
 
சந்தன மஹாலிங்கம் கோவிலுக்கு வந்து விட்டோம். இங்கு சுயம்பு லிங்கம் சந்தனக் காப்பிடப் பட்டிருக்கிறார். இங்கு சந்தனமும், திருநீறும் பிரசாதமாக வழங்கப் படுகிறது. சுயம்பு லிங்கத்தை பிரகாரம் சுற்றி வரலாம். முன்பு சந்தன மரம் இருந்திருக்கிறது. இப்போது இல்லை. பக்கத்தில் ஆகாச கங்கை அருவி இருக்கிறது. அருவியிலிருந்து வரும் தண்ணீர் தான் இங்கு பூஜைக்கு, சமையலுக்கு, குடிநீருக்கு எல்லாம். அருவிக்கு அடுத்தாற் போல் வினாயகர், முருகன், சந்தன மஹா தேவி எல்லாம் இருக்கிறார்கள். அனைவரையும் தரிசனம் செய்து கொண்டோம்.
 
 
பெரிய மகாலிங்கம், தவசிப்பாறைக்கு செல்லும் பாதையில் கரடித்தொல்லையும், வழியும் சரியில்லாததால் பிறகு பார்த்திக்கொள்ளலாம் என நினைத்து இரவு 7:00 மணிஅளவில் அகத்தியர் ஆசிரமத்தில் அன்னதானம் உண்டபின் அங்கேயே படுத்து உறங்கினோம். பெரிய மகாலிங்கம், தவசிப்பாறைக்கு அருணும், ஹரியும் மட்டும் காலை சென்று வந்தனர். எல்லோரையும் கூட்டிசென்றால் ரயிலை பிடிக்கமுடியாது என்பதாலும் செல்லவில்லை.

 
 
 
பெரிய மகாலிங்கம் 
 



பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் மஞ்சள் ஊத்து தீர்த்தம் உள்ளது. தீர்த்தமும், இப் பகுதியிலுள்ள மண்ணும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. பார்வதி இத்தலத்துக்கு தவம் செய்ய வந்தபோது, உடன் வந்த புஷ்பகை, கெந்தகை, அமிர்தகை, கருணிகை, மிருதுபாஷிகை, சுச்லிகை, சுமுகை என்ற பணிப் பெண்கள் இந்த தீர்த்தத்தில் மஞ்சள் தேய்த்து குளித்ததால் இப்படி இருப்பதாக கூறப்படுகிறது.

தவசிப்பாறை
 

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை நவக்கிரக கல் என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள ஏசி பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் வெள்ளைப்பிள்ளையார் பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
 
காலை எழுந்து காலை கடன்களை முடித்து கீழிறங்க புறப்பட்டோம். அகத்தியர் ஆசிரமத்தில் காலை பொங்கல் போட்டார்கள். திருப்தியாக சாப்பிட்டோம். நமது சோற்றுச்சாமியார் அதற்குள் என்னென்ன ஆசிரமத்தில் என்னென்ன காலை உணவு என விவரித்தார். அவரது database கண்டு வியந்தோம். அகத்தியர் ஆசிரமத்திற்கு எல்லோர் சார்பாகவும் கிரிஷ் Rs. 1000 அன்னதான நன்கொடையாக தந்தார். சிலர் தனியாகவும் தந்தார்கள். வழியில் இயற்கை சாம்பிராணி, மூலிகை திரி சிலர் வாங்கிக் கொண்டனர். பிறகு நடக்கத்தொடங்கினோம்.
 
நேற்று குளித்த இடத்திலேயே இன்றும் குளித்தோம். இங்கு வந்துதான் கைபேசி அலைவரிசை கிடைத்தது. நான் மற்றும் சிலர் வீட்டிற்கு பேசினோம். மேலே சுத்தமாக அலைவரிசை கிடைக்கவில்லை.நிம்மதியாக குளித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாகராஜன் (பாம்பு) எங்களை கல்லுக்கிடையே இருந்து நோட்டம் போட்டுக்கொண்டிருந்தது. திடீரென தண்ணீருக்குள் பாய்ந்தது. பாம்பென்றால் படையும் நடுங்குமல்லவா? நாங்களும் பயந்து உடனடியாக தண்ணிரில் இருந்து வெளியே வந்தோம்.

பிறகு சிறிது ஓய்வெடுத்துவிட்டு கீழே இறங்கி ராஜகாளியம்மன் கோவில் அருகில் வந்து ஹரி, அருண் கும்பலுக்காக காத்திருந்து வந்தவுடன் தாணிப்பாறை வந்து ஷேர் ஆட்டோ மூலம் வத்திராய்ப்பு வந்து பேருந்து மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மதியம் சாப்பிட்டுவிட்டு ஆண்டாள் கோவில் சென்றோம். கோயில் வாசலில் இருந்த வெங்கடேஷ்வராவில் வீட்டிற்கு பால்கோவா வாங்கி கொண்டு கோவில் வாசலில் நடை திறக்காததால் காத்திருந்தோம்.

மாலை சுமார் 4:30 அளவில் ஆண்டாள் அம்மனை தரிசனம் செய்துவிட்டு ஆண்டாள் பிறந்த இடம், சக்கரத்தாழ்வார் கோயில் சென்றுவிட்டு எல்லோரையும் ரயிலடி செல்ல சொல்லிவிட்டு நான், பாலா, கிரிஷ், கார்த்தி நால்வரும் இரவு உணவு வாங்கி கொண்டு ரயிலடி சென்றோம். சுரேஷ் சாரும், அவரது தம்பியும் ஏதோ வெங்கல பாத்திரம் வாங்கிகொண்டு வந்தார்கள். ரயில் வந்தவுடன் எல்லோரும் ஏறி சாப்பிட்டுவிட்டு படுத்தோம்.
திருப்பம் ஏற்படும்: சதுரகிரிக்கு வருபவர்கள் சங்கடப்படுவதில்லை. சித்தர்கள் வாழ்கிற பூமி இது. இங்கே எல்லைத் தெய்வங்களாக வனக்காளி, வனதுர்க்கை உள்ளனர். சுந்தரமூர்த்தியை வழிபட வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும்.

அடுத்த மலையேற்றத்தில் சந்திப்போம்