Dec 20, 2025

வீட்டு பத்திரம், நிலப்பத்திரம் தொலைந்துவிட்டதா? இந்த 19 விஷயங்கள் செய்தால் போதும்!

வீட்டு பத்திரம், நிலப்பத்திரம் என ஏதேனும் தொலைந்து விட்டதா? கட்டாயம் செய்ய வேண்டிய 19 விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.


1. பத்திரம் தொலைந்ததை தெரிந்தவுடன் தீர ஆராய்ந்து எங்கெல்லாம் தொலைந்து இருக்கும் என மனதை நடுநிலையோடு உணர்ச்சி வசப்படாமல் தேடி பார்க்கவும்.

2. பிறகு காவல் நிலையத்திற்கு சென்று தொலைந்து விட்ட விஷயத்தை தெளிவாக எழுதி புகாராக அளியுங்கள்.

3. பணியில் இருக்கும் காவல் அதிகாரியின் கையொப்பம் மற்றும் காவல் நிலைய முத்திரையுடன் புகார் பெற்றுக் கொண்ட இரசீது பெற வேண்டும்.

4. பிறகு அவர்களும் இரண்டு மூன்று நாட்கள் தேடிபார்க்க சொல்வார்கள். அதன் பிறகும் கிடைக்க வில்லை என்றால் காவல் நிலையத்தில் F.I.R. பதிவு செய்வார்கள்.

5. பிறகு பிரபல பத்திரிக்கைகளில் பத்திரம் காணவில்லை என்று விளம்பரம் கொடுக்க வேண்டும்.

6.அதன் பிறகும் பத்திரம் உங்கள் கைக்கு கிடைக்கவில்லை என்றால். காவல் நிலையத்தில் பொறுப்பு காவலரை சந்தித்து சொத்து ஆவணத்தின் முக்கியத்துவத்தை சொல்லி சீக்கிரம் NOT TRACEBLE கண்டுபிடிக்கவில்லை என்று சான்று பெறுதல் வேண்டும்.

7. பிறகு நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் பத்திரம் தொலைந்து விட்டது என உறுதி சான்று (AFFIDAVIT) பெறுதல் வேண்டும்.

8. பத்திர அலுவலகத்தில் உங்களுடைய பத்திர நகலை COPY OF DOCUMENT போட்டு நகலை பெறுதல் வேண்டும்.

9. இனி முதல் உங்களுடைய..

1.நோட்டரி உறுதி மொழி பத்திரம்

2. பத்திரிகை விளம்பரம் நகல்

3. காவல் நிலைய புகார் மனு இரசீது

4. F.I.R. &

5.NOT TRACEBLE சான்று ஆகிய ஆவணங்களும் இருந்தால் தான் உங்கள் "நகல் பத்திரம்" தொலைந்த ஒரிஜினல் ஆவணங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும்.

10. மேற்படி வேலைகள் எல்லாம், செய்ய பணம், உழைப்பு, நேரம் ஆகியவற்றை செலவு செய்ய வேண்டும். வேறு வழியில்லை இவற்றை செய்வதால்தான் பத்திரம் செல்லும்.

11. பத்திரம் தொலைந்த இடத்தை வாங்குபவர் பத்திரம் தொலைந்ததை கேள்விப்பட்டால் பத்திரம் யாரிடமோ அடமானத்தில் இருக்குமோ என்ற அச்சமும் சந்தேகமும் உருவாகும்.

12. பத்திரம் தொலைந்த இடத்தை வாங்கியவர் மேற்படி, F.I.R, NOT TRACEBLE சான்று, பேப்பர் விளம்பரம், நோட்டரி அவிடவிட் போன்றவை இருந்தாலும் பத்திரம் வேறு ஏதாவது அடமானத்தில் இருக்கிறதா என தீவிர கள விசாரணை செய்தல் வேண்டும்.

13.வாங்குபவரும், இந்த இடத்தை வாங்க போகிறேன் மேற்படி பத்திரங்கள் தொலைந்துவிட்டது. யாருக்காவது ஆட்சபனைகள் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்கவும், எதிர்காலத்தில் ஏதாவது உரிமைகோரல்கள் வந்தால் செல்லாது என வழக்கறிஞர் மூலம் விளம்பரம் கொடுத்தல் வேண்டும்.

14. நாம் வாங்கிய சொத்து பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் வைப்போம்., நெருப்பு எண்ணெய் இங்க், பெயிண்ட் போன்ற பொருட்கள் பத்திரத்தில் படாத இடத்தில் வைக்க வேண்டும்.

15 பத்திரம் செய்யும் போதே இரண்டாம் பிரதி ( SECOND COPY) என்று குறைவான முத்திரைத்தாளில் பத்திரத்தில் என்னவெல்லாம் எழுதியிக்கிறோமோ அதே போல் எழுதி பத்திர அலுவகத்தில் அதே எண்ணில் பதிவு செய்யலாம்.

16. மேற்படி SECOND COPY யை E.B பெயர் மாற்றத்திற்கு, பட்டா பெயர் மாற்றத்திற்கே, கட்டிட அனுமதிக்கு என தேவையான இடங்களில் ஒரிஜினலுக்கு பதில் II nd copy யை காட்டலாம். இதனால் ஒரிஜினல் வெளியில் நடமாடும் வாய்ப்பு மிக குறைவு.

17. பெரும்பாலும் ஒரிஜினல் நகல் எடுக்கும் கடைகளில், நகல் எடுக்க செல்லும் போதோ அதிகம் தொலைகிறது. பத்திரத்தை ஒரு நகல் கலர் Xerox COPY போட்டு அதனை MASTER COPY ஆக பயன்படுத்தலாம்

18. இப்பொழுது எல்லா பத்திரங்களையும் முறையாகவே SCAN செய்து உங்களில் GOOGLE DRIVE இல் SOFT COPY ஆக வைத்து கொள்வது மிகப்பயனுள்ளது தேவைப்படும் போது SOFTCOPY கள் மூலம் நகல் எடுத்து கொள்ளலாம்.

19. பத்திரங்களை பஸ்களில் பெரும்பாலும் தொலைப்பவர்கள் பத்திரத்தை நல்ல பைலில் வைத்து கைப்பைகளில் வைக்காமல், வெறும் கையில் சுருட்டி வைத்து கொண்டு செல்லும் நபர்கள் தான் தொலைக்கிறார்கள். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Nov 26, 2024

இறந்தவரின் ஆதார், பான் கார்டு ஆவணங்கள் என்ன ஆகும்..? அவசரப்பட்டு தூக்கி போடாதீங்க..!

இறந்தவரின் ஆதார், பான் கார்டு ஆவணங்கள் என்ன ஆகும்..? அவசரப்பட்டு தூக்கி போடாதீங்க..!


இந்தியாவில் ஆதார் கார்டு, பான் கார்டு , வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை ஒரு நபருக்கான மிக முக்கிய அடையாள ஆவணங்களாக இருக்கின்றன. ஒருவேளை ஒரு நபர் இறந்துவிட்டால் அவர்களின் இந்த அடையாள ஆவணங்கள் என்ன ஆகும்? என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

ஆதார் கார்டு: இந்திய குடிமக்களுக்கு அரசு வழங்கக்கூடிய ஒரு தனித்துவமான அடையாள எண் இதுவாகும். இதனை அடையாள ஆவணமாகவும் , முகவரி சான்றாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். நம்முடைய வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை, இபிஎப் கணக்கு , எல்பிஜி சிலிண்டருக்கான மானியம், ஸ்காலர்ஷிப் என பல்வேறு நலத்திட்டங்களிலும் ஆதார் எண்ணானது இணைக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைக்கு ஒரு நபர் இறந்து விட்டால் அவருடைய ஆதாரை செயலிழக்க செய்வது அல்லது ரத்து செய்வது தொடர்பான எந்த ஒரு பிரிவும் செயல்பாட்டில் இல்லை. ஆனால் ஒருவரது ஆதார் எண்ணை முறைகேடாக யாரும் பயன்படுத்தாமல் இருப்பதை தடுக்க அவர்களின் வாரிசுதாரர்கள் UIDAI இணையதளம் வாயிலாக அந்த நபரின் பயோமெட்ரிக் டேட்டாக்களை லாக் செய்ய முடியும்.

பான் கார்டு : வருமான வரி கணக்கு தாக்கல் ,வங்கி கணக்கு, டிமேட் கணக்கு மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபர் இறந்து விட்டால் அவருடைய வங்கிக் கணக்கினை முடிப்பது, குறிப்பிட்ட சில நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, டிமாட் கணக்கில் உள்ள பங்குகளை மாற்றுவது என்பன உள்ளிட்டவற்றுக்கு பான் அட்டை மிகவும் கட்டாயம்.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு வாரிசுதாரர்கள் Assessing Officerக்கு ஒரு விண்ணப்பம் செய்து பான் அட்டையை சரண்டர் செய்து விடலாம். ஆனால் அனைத்து அவர் சம்பந்தப்பட்ட சொத்து மற்றும் நிதி பரிவர்த்தனைகள் அனைத்தையும் முடித்த பிறகு தான் இதனை செய்ய வேண்டும். 

வாக்காளர் அட்டை: ஒரு நபர் இறந்துவிட்டால் அவருடைய வாக்காளர் அடையாள அட்டையானது உடனடியாக ரத்து செய்யப்படும். இதற்காக உள்ளூரில் இருக்கும் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று படிவம் 7ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் .இத்துடன் இறப்பு சான்றிதழையும் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்து விட்டால் தேர்தல் ஆணையம் இந்த நபரின் பெயரை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடும்.

பாஸ்போர்ட்: பாஸ்போர்டை பொறுத்தவரை அதனை சரண்டர் செய்யவோ அல்லது ரத்து செய்ய வேண்டிய தேவையோ இருக்காது. அதற்கான காலாவதி காலம் வந்தவுடன் அது தானாகவே காலாவதி ஆகிவிடும்.

ஓட்டுநர் உரிமம்: இறந்த நபரின் பெயரில் இருக்கும் வாகனங்களை பெயர் மாற்றம் செய்வதற்கு இந்த ஓட்டுனர் உரிமம் ஆனது கட்டாயம். எனவே அருகில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று இறந்தவரின் பெயர் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து அவர் பெயரில் இருக்கும் வாகனங்களை வாரிசுதாரர்கள் தங்களின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். 

ஒரு நபர் இறந்த உடன் ஆதார் , பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை உடனடியாக தூக்கி போடாமல் அவற்றை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஏனெனில் பிற்காலத்தில் அவை கண்டிப்பாக பயன்படும்.

May 30, 2017

குழந்தைக்கு பெயர் சூட்டுதல் முதல் பள்ளியில் சேர்ப்பது வரை... எந்த நட்சத்திர - நாளில் தொடங்கலாம்?

குழந்தைக்கு பெயர் சூட்டுதல் முதல் பள்ளியில் சேர்ப்பது வரை... எந்த நட்சத்திர - நாளில் தொடங்கலாம்?


பதினாறு செல்வங்களில் மிக முக்கியமான செல்வம் குழந்தைச் செல்வம் என்பார்கள். அந்த பிள்ளைச் செல்வத்தைப் பெற்றெடுத்தால் மட்டும் போதுமா? குழந்தைக்குச் செய்ய வேண்டியவற்றை நாம் சரியான  நாள்களில் செய்யவேண்டும். எந்தெந்த நாள்களில் என்ன செய்யலாம் என்பது பற்றி திருமலைதிருப்பதி தேவஸ்தான பஞ்சாங்க ஜோதிட பிரகஸ்பதி பராசரம் பாலசுப்பிரமணியம் கூறும் தகவல்களின் தொகுப்பு இது.


குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கேற்ற நட்சத்திரங்கள்:                                                                                                              

குழந்தை பிறந்து 10, 12 மற்றும் 16வது நாளில் பெயர் சூட்டுவதற்கான சடங்கை மேற்கொள்வது நல்லது. திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் ஜாதகக் கட்டத்தில் எட்டாமிடம் சுத்தமாக இருக்கும் சுபமான லக்னங்களில், துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி மற்றம் திரயோதசி ஆகிய திதிகளில், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம்ம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று வருமாறு பார்த்து குழந்தைக்கு நாமகரணம் சூட்டுவது நல்லது.  ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகள் சிறந்தவை.



குழந்தையைத் தொட்டிலில் இடுதல்:

பச்சிளம் குழந்தைகள் ஒரு நாளைக்கு  பதினாறு மணி நேரம் தூங்குவது அவர்கள் உடல் வளர்ச்சிக்கு அவசியம். குழந்தைகள் ஓய்வுகொள்ள தொட்டிலிடும் நிகழ்ச்சி முக்கியம். அந்த நிகழ்ச்சியை குழந்தை பிறந்த 10, 12, 16, மற்றும் 22ம் நாளில் தொட்டிலில் இடுவது வழக்கம். இதற்கு ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, நட்சத்திரங்களும் துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி  ஆகிய திதிகளில் ஏதேனும் ஒன்றும் வருமாறு நாளைத் தேர்வு செய்யவேண்டும். அந்த நாளுக்கு சுபகோள்கள் பார்வையுள்ள லக்னமும் எட்டாமிட சுத்தமும் முக்கியம்.

அரைஞாண் கயிறு அணிவித்தல்:

வெள்ளி அல்லது பொன் அரை ஞாண் கயிற்றை புண்ணியாஹவசனம் செய்யும் நாளன்று அல்லது ஐந்தாவது மாதத்தில் கட்டலாம். அவ்வரைஞாணுடன் கருகமணி, செப்புக்காசு கட்டினால், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுப திதிகள், சுப லக்னத்தில் அரைஞாண் கயிறு அணிவித்தால், குழந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கும். எருக்கஞ்செடியின் நாரினால், அரைஞாண் கயிறு கட்டினால், குழந்தை அடிக்கடிப் பாலைக் கக்குவது நிற்கும் என பாட்டி வைத்தியம் கூறுகிறது.

அன்னம் ஊட்டுதல் (அமுதூட்டல்):

தாயமுதால் வளரும் குழந்தைக்கு சிறந்த உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த நாளைத் தேர்ந்தெடுப்பது மரபு. இது, 6, 8, 9 அல்லது     12-வது மாதத்தில் அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திராடம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும் துவிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும்  திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இதற்கும் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னம் பலம் வாய்ந்ததாக இருத்தல் அவசியம்.


முடிக்காணிக்கை செய்வது எப்போது?

நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ  முடிக்காணிக்கை செய்யும் சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.  இதை 3 அல்லது 5ம் ஆண்டு செய்வது வழக்கம். வளர்பிறை மிகவும் ஏற்றது. துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரியோதசி ஆகிய திதிகளிலும், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி,  உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளும், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய லக்னங்களும்  முடிக்காணிக்கை செய்வதற்கு ஏற்றவை. ஜாதகக் கட்டத்தில் எட்டாமிடம் சுத்தமாக இருத்தல் அவசியம். ஏழில் சூரியன், செவ்வாய் இருக்கக்கூடாது.


காது குத்தும் நிகழ்ச்சி:

உடல்நலத்துக்கு, வளர்ச்சிக்கும், நோய் நிவாரணத்துக்கும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. மிகவும் உயர்ந்த நிலையை எட்டிய நமது முன்னோர்கள் இதைக் கருத்தில்கொண்டுதான் காதுகுத்தும் நிகழ்ச்சியை குழந்தைப் பருவத்திலேயே செய்தனர். 6, 7 அல்லது 8 - ம் மாதத்தில் பகலில் செய்ய வேண்டும். இரண்டு திதிகள் இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும். மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளிலும் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களும் காது குத்தும் நிகழ்ச்சியை செய்வதற்கு ஏற்றவை.  ஜாதகக் கட்டதில் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும்.


கல்வி கற்க என்றைக்கு அனுப்ப வேண்டும்?

கல்வியின் சிறப்பைக் கூறுமிடத்து எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பார்கள். ஐந்தாவது வருடத்தில் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில்  செய்வது உத்தமம் எனப் பெரியோர்கள் கூறுவார்கள். அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி,  திருவோணம், அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, ஆகிய திதிகளும், மிதுனம், கடகம், மகரம், மீனம் ஆகிய லக்னங்களும் கல்வி கற்க பள்ளியில் சேர்க்க ஏற்றவை. ஜாதகக் கட்டத்தில்  நான்கு எட்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கக்கூடாது. லக்னத்தையும், நான்காமிடத்தையும் சுபகோள்கள் பார்த்தல் உத்தமம்.

May 27, 2016

இன்றைய சூழலில் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?

இன்றைய சூழலில் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?
மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். 

எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம்
 பெருமளவில் குறைந்து போவதாக வும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான். பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும். 
http://media.webdunia.com/_media/ta/img/article/2016-05/27/full/1464346109-7474.jpg
 

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் "மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது' என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம். நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.


May 7, 2014

திருமண நிதியுதவி பெறுவது எப்படி?



திருமண நிதியுதவி பெற யாருக்கு விண்ணப்பிப்பது? எத்தனை நாட்களுக்குள் விண்ணப்பிப்பது?

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே இதன் நோக்கம். கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம். திருமண நிதியுதவி பெற யாருக்கு விண்ணப்பிப்பது? எத்தனை நாட்களுக்குள் கலப்புத் திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிப்பது ஆகிய விவரங்கள் இங்கே...

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)திட்டம் 1- மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம். தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4)ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5)மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்

தேவையான சான்றுகள்:
* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் - திட்டம் 1.
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று - திட்டம் 2.

யாரை அணுகுவது?
*மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம்.

*தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்
ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
*திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
*திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் :
1)திட்டம் 1- கல்வித்தகுதி தேவையில்லை.
2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

நிபந்தனைகள் :
1)ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2)விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
3)மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.
4)மணப்பெண்ணின் தாயிடம் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிட்டால், மணமகள் பெயரில் வழங்கலாம்.

தேவையான சான்றுகள்:
* பள்ளிமாற்றுச் சான்று நகல்
* திருமண அழைப்பிதழ்
* வருமானச் சான்று
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் - திட்டம் 1.
* பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற)

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்
தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் :
1)ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டத்திற்கான தகுதிகளே இத்திட்டத்திற்கும் பொருந்தும்.
2)வருமான வரம்பு இல்லை.
3)மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.

தேவையான சான்றுகள்:
1)சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம் அல்லது தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்.
2)விண்ணப்பதாரரின் வயதுச் சான்று.
3)பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).

குறிப்பு: விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். திருமணத்தன்றோ, திருமணத்திற்குப் பிறகோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது மேற்கூறிய மூன்று திட்டங்களுக்கும் பொருந்தும்.

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2- 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

2)திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3)வருமான வரம்பு இல்லை.

4)மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமனின் வயது நாற்பதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
* விதவைச் சான்று
* மறுமணப் பத்திரிகை
* மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்று
* திருமணப் புகைப்படம்
* பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி, இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்

வழங்கப்படும் உதவி:
திட்டம் 1- 25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.
திட்டம் 2- 50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்:
1)பிரிவு 1- புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து, பிற இனத்தவரை மணந்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.

2)பிரிவு 2- புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

3)திட்டம் 1- இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

4)திட்டம்2-பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு, எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

5)வருமான வரம்பு இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்:
* திருமணப் பத்திரிகை அல்லது திருமணப் பதிவுச் சான்று
* மணமகன் அல்லது மணமகளின் ஜாதிச் சான்று
* மணப்பெண்ணின் வயதுச் சான்று
* பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று (திட்டம் 2-இல் பயன்பெற).
குறிப்பு : அனைத்துத் திட்டங்களுக்கும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:
*சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. http://www.chennaicorporation.gov.in/moovaloor/appl_form_step1.jsp என்கிற இந்த இணைப்பில் சென்று, விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

*விண்ணப்பம் கிடைக்கவில்லையென்றாலோ, விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்கவில்லையென்றாலோ இந்தியன் குரல் அமைப்பை தொடர்புகொள்ளலாம். தொடர்புக்கு: 94443 05581

 

நன்றி: புதியதலைமுறை