Jan 2, 2013

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 4

முந்தைய பகுதிகள்

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 2


எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 3

நாங்கள் கடப்பாறை பாதையை தேர்ந்தெடுத்தோம். உருப்படியாக  ஏறிச் சென்று இறங்க வேண்டுமே என்ற பயம் பிடித்துக் கொண்டது. எல்லாம் வல்ல சிவனை வேண்டிக்கொண்டோம். நண்பர் ஹரி  "கீழே பார்க்காதீர்கள். பாதையை மட்டும் பார்த்துக் கொண்டு நகருங்கள்" என்று கூறினார். கடப்பாரைப்படிகளைக் கடந்தபிறகு ஒரு பெரிய பாறையைச் சுற்றி இரும்பால், தண்டவாளப் பாதை போட்டிருந்தார்கள். பாறையை ஒட்டியே மெதுவாக நடந்து சென்று கடந்து சென்றோம். பாறையின் எதிர்ப்பக்கம் பார்வையைத் திருப்பினால் அதலபாதாளத்தில் நிலப்பரப்பும் மலைத் தொடர்களும் வயிற்றைக் கலக்கியது. மெல்ல மெல்ல மலை ஏறி உச்சியை அடைந்தோம். அங்கு  இரண்டு  கோவில் மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. சுற்றுப் பாதைகள் இருந்தன. ஆஹா என்ன காற்று? என்ன குளிர்? எங்களுக்குக் கீழே வெண்பஞ்சு மேகக் கூட்டங்கள், அதனால் ஏற்பட்ட இன்பக் குளிர். ஹோவென சப்தமிடும் காற்றோடு ஏறி வந்த களைப்பை எல்லாம் இயற்கை எடுத்துக்கொண்டது.ஒவ்வொரு வளைவிலும் மலையடிவாரம் விதவிதமான கோணத்தில் கண் கொள்ளாக் காட்சியாக தெரிகிறது.
சூலாயுதம்

திருஅண்ணாமலையார் பாதம்

சற்று தள்ளி நடந்தபோது ஓரிடத்தில் பெரிய சூலாயுதம் ஒன்று பாறையில் நடப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் பாதங்கள் பாறையில் பதிந்திருந்தது. திருஅண்ணாமலையார் பாதம் என்றார்கள். நாம் பயபக்தியோடு வணங்கி கொண்டோம்.
கோவிலைச் சென்றடைந்தால் பூசாரியே இல்லை. நாமாகத் தான் பூஜை செய்ய வேண்டுமாம்.அட!. ஆலயத்தின் உள்ளே கற்பூரம் ஏற்ற வேண்டாம் என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதால் வெளியிலேயே ஏற்றி விட்டோம்.

கோயில் வெளிப்புறத்தோற்றம்



மேலே மூலஸ்தனத்தைப் பார்த்தால், ஸ்ரீமல்லிகார்ஜீனசுவாமியாக சிவபெருமானும், அகிலாண்டேஸ்வரி ஸ்ரீபிரம்மராம்பிகை தாயாராக பார்வதியும் காட்சியளிக்கின்றனர். வினாயகருக்கும் முருகருக்கும் வணக்கம் செலுத்தி விட்டு மல்லிகார்ஜுனர் சன்னதி சென்றோம் அவரையும் வணங்கிய பின்பு ஸ்ரீபிரம்மராம்பிகை அம்பாள் சன்னதியிலும் பயபக்தியோடு வணங்கினோம்.
ஸ்ரீமல்லிகார்ஜீனசுவாமி
         
                   


அகிலாண்டேஸ்வரி ஸ்ரீபிரம்மராம்பிகை

ஒரு புராணக்கதையை இங்கே சொல்லியே ஆக வேண்டும். ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாக பொத்தினாள்.அப்படி பொத்தியது சில நொடிகள்தான்.அதற்குள் பூமியில் பலகோடி வருடங்கள் ஓடிவிட்டன.விஷயமறிந்த சிவபெருமான் உடனே தனது நெற்றிக்கண்ணைத் திறந்து வைத்து பூமிக்கும்,பிரபஞ்சத்துக்கும் ஒளி கொடுத்து காப்பாற்றிவிட்டார். அதனால்,சிவபெருமான் பார்வதியை நீ பூமிக்குப்போய் என்னை நினைத்து கடும்தவம் செய்; அதுதான் உனக்குத் தண்டனை! என அனுப்பியிருக்கிறார். பாவம் பார்வதி விளையாடியது குற்றமாம்.
அதற்குப் பார்வதி, “உங்களை விட்டுப்பிரிந்து என்னால் ஒரு கணம் கூட இருக்க முடியாது.நான் எப்படி?” எனக்கேட்டிட, பார்வதியின் துணைக்கு ஏழு சித்தர்களை அனுப்பி வைத்திருக்கிறார். அவர்கள் அகத்தியர், பராசாசர் உள்ளிட்டோர் தான் பச்சையம்மனின் வாசலில் ஏழு முனியாக அமர்ந்திருக்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 4560 அடிகள் உயரத்தில் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது என விளம்பரப்படுத்துகிறார்கள். திரு அண்ணாமலையைப்போல இந்த பர்வதமலைக்கும் கிரிவலம் உண்டு. கிரிவலதூரம் 26 கிலோமீட்டர்கள் ஆகும்.

பர்வதமலை தோற்றம்


எங்களுக்கு மலையுச்சியை அடைய 4 மணிநேரம் ஆனது. ஆலயவழிபட்டுக்கு பின் சிறிது ஓய்வு எடுத்து நண்பர் பாலா கொண்டு வந்த இட்லி, புதினா சட்னி, தக்காளி சட்னியை ஒரு பிடி பிடித்தோம். பசிக்கு திவ்யமாக இருந்தது. காலை உணவருந்தி விட்டு அங்கே இருந்த திருப்பணிக் கமிட்டி உறுப்பினரிடம் எங்களால் ஆன சிறிது நன்கொடை கட்டட நிதியாக கொடுத்தோம்.

600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. இப்போது மீண்டும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதியுடன் திருவல்லிக்கேணி ஸ்ரீபருவதமலை அடியார்கள் திருப்பணிசங்கம் சார்பாக திருப்பணிகள் நடைபெற இருக்கிறது.  
பின்னர் காலை 10:30 மணியளவில் மேலிருந்து கீழிறங்க ஆயத்தமானோம். மலை ஏறுவதைவிட கீழிறங்குவது சற்று கடினமாக இருந்தது. இரும்புப் படிக்கட்டுப்பாதை, கடப்பாரைப் பாதை  என மறுபடி  அதேபாதை,  ஏறியதை விட இறங்கும் போது சிரமமாக இருந்தது. கீழே அதல பாதாளம். ஆனால் இதுவரை யாருக்கும் இந்த மலையில் எந்தத் தீங்கும் நேர்ந்ததில்லையாம்.

மலையை விட்டு இறங்கும்போதும் வேகமாக ஓடி வர முடியவில்லை; மெதுவாகத்தான் வர முடிந்தது. இறங்குவதற்கும் 3 மணி நேரம் ஆனது. மழை பெய்ததால் வழுக்கல் வேறு. எனக்கு சில விழுப்புண்கள் ஏற்பட்டன. கீழே இறங்கும் போதுதான் தெரிந்தது. இந்த வழியாகவா ஏறிவந்தோம்!!??? என ஆச்சரியம்.

இறங்கும் பாதை
              


                
               









இந்த Trip-ல் NAT (எ) நடராஜ் தான் எங்கள் ஹீரோ. முயன்றால் முடியாதது  இல்லைஎன்பதை நிரூபித்தவர். கீழே இறங்கியவுடன் எல்லோருக்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம் அருகில் உள்ள அவர்கள் உறவினர் வீட்டில் சொல்லி வைத்து அவர் மனைவி, மகன் மூலம் சுடச்சுட நல்ல முறையில் தந்து உதவி எல்லா புண்ணியத்தையும் தட்டிச் சென்றுவிட்டார். இறங்கியவுடன் மனைவி, மகனை பார்த்ததும் உடம்பு முடியவில்லை என கூறி அவர்களுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

NAT (எ) நடராஜ்


பயணம் தொடரும்....!

No comments: