Jan 2, 2013

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 2

முந்தைய பகுதிகள்

எனது பர்வதமலை புனிதப் பயண அனுபவம் - 1


முனிகள்


அடிவார வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருந்தாள். அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்திருந்தனர். பச்சையம்மாளின் ஆசியோடு, மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு  காலை 5.45க்கு மலையேறத்துவங்கினோம்.

பச்சையம்மாள் கோவில் வாசல்

தென்மாதிமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் காட்டு வழிதனில் நடந்து சென்று பார்த்தால் தூரத்தே உயரமாக நிமிர்ந்து சூழ்ந்திருக்கும் பல மலைகளுக்கு நடுவே தனித்துக் காட்சி தருவது பர்வதமலை. பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் (சுமார் 1250 படிக்கட்டுகள்) கட்டப்பட்டுள்ளன.




படிக்கட்டு ஆரம்பிக்கும் இடம்


மேலே திருவல்லிக்கேணி பர்வதமலை பக்தர்கள் சார்பாக மேலே கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் முதல் அனைத்து பொருட்களும் கீழே இருந்துதான் தலைச்சுமையாகக் கொண்டு செல்ல வேண்டும். படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் நிறையப்பைகளில் மணல் கட்டி வைத்திருந்தார்கள். நாங்களும் ஆளுக்கு ஒரு பை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்கே மூச்சு வாங்கியது; மென்பொருள் துறையில் குனிந்து நிமிராமல் உட்கார்ந்தே வேலை செய்தது இங்கே காட்டியது. சிறிது தூரத்தில் மணல் பையை வழியில் வைத்துவிட்டேன். நம்மை போல் நிறைய பேர் முடியாமல் வைத்து இருந்தார்கள். நாம் நமது உடம்பையே தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. காரணம் மலையின் அமைப்பு அப்படி!!! நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது. சுமார் 1250 படிகள் ஏற 1 மணி நேரத்திற்கு மேல் ஆனது. சரவணன் மட்டும் மணல் பைகளை கடைசி வரை கொண்டு வந்தார்.(திருமண வேண்டுதலுக்காக சிரத்தையாக தூக்கி வந்தார்).

முதல் மலை படிக்கட்டுப்பாதை



வழியில் சில இடங்களில் 10 நிமிடம் வீதம் ஓய்வெடுத்தோம்.(அதிக நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் கிளம்ப சற்று கஷ்டமாக இருக்கும்). வழியில் சிறிய ஓலைக்குடிசைகளில் உள்ள கடைகளில்( இந்த மலையில் இவை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் போல. இளநீர், பன்னீர் சோடா, பஜ்ஜி, தண்ணீர் பாட்டில், இட்லி எல்லாமே கிடைக்கும்). இந்தக் கடைகள் இல்லாமல் இருந்தால் இம்மலை ஏறுபவர்களுக்கு எந்த ஆகார வசதியும் இல்லாமல் மிகவும் சிரமமாகிவிடும். நாம் எதுவும் தொடவில்லை. மலை ஏறும் போது காலி வயிறுடன் ஏறுவது என்பது நமது குறிக்கோள். இரண்டு காரணங்கள். 1) இயற்கை உபாதைகளை தடுக்கலாம். 2) நடக்க சுமை தெரியாது. மேலும் காலி வயிறுடன் சென்றால் நமது வேண்டுதலை ஆண்டவன் நிறைவேற்றலாம் என்ற நப்பாசை தான். ஹி…ஹி…ஹி

வழியில் நமது நண்பர் ரமேஷ் கேமிராவில் இயற்கை காட்சிகளையும், நடந்து சென்ற பாதைகளையும், நமது மூதாதையர்களையும் (குரங்குகள்) படம் பிடித்துக்கொண்டே வந்தார். பாதி படிக்கட்டுகள் ஏறியபோது நமது NAT க்கு நட்டு கழன்று நாக்கு உலர்ந்து விட்டது. கண்கள் மேலேறிக்கொண்டது. வாந்தி, மயக்கம் வருவதாகவும், தலை சுழற்றுகிறது எனவும் புலம்பத்தொடங்கி நான் மேலே வரவில்லை. நீங்கள் போங்கள். நான் திரும்ப கீழே போகிறேன் என்றார். எனக்கு இவரை விட்டுவிட்டு செல்லவும் விருப்பமில்லை. தனியாக கீழே அனுப்பவும் மனமில்லை. சரவணன், சிறிது Electrol கலந்து கொடுத்து சிறிது ஓய்வெடுக்க சொன்னார். சிறிது நேரத்திற்கு பின்னர் மல்லிகார்ஜீனர் அருளால் துள்ளியெழுந்த மான் போல புறப்பட்டு விட்டார். மெதுவாக பயணம் தொடங்கியது. அடுத்த சோதனையும் ஆரம்பித்தது.


பயணம் தொடரும்....!

1 comment:

Anonymous said...

excellent