Nov 28, 2012

ஆயுள் காப்பீட்டு பணத்தை எப்படி பெறுவது?

ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர் இறந்துவிட்டால் அந்த பணத்தை எப்படி வாங்குவது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர் இறந்துவிட்டால் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து எப்படி பணத்தை பெறுவது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

பாலிசி எடுத்தவர் இறந்துவிட்டார் என்றால் அவர் தனக்கு பின் யாருக்கு பணம் போக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரோ அவர் அல்லது அவர்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்றோ இல்லை அவர்களின் இணையதளத்திலோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். இறந்தவர் பாலிசி படிவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை நியமித்திருந்தால் அவர்கள் அனைவரும் தனித்தனியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து காப்பீட்டு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும்.
அதன் பிறகு இறந்தவரால் நியமிக்கப்பட்டவர்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். முதலில் பாலிசி எடுத்த ஒரிஜினல் ஆவணத்தின் ஜெராக்ஸை சமர்பிக்க வேண்டும். ஒரிஜினல் ஆவணம் இல்லை என்றால் காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்று பாலிசி எண்ணை தெரிவித்தால் அவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களில் இருந்து உங்கள் பாலிசி ஆவணத்தை எடுப்பார்கள். அதன் பிறகு இறப்பு சான்றிதழை சமர்பிக்க வேண்டும். பாலிசி எடுத்தவர் விபத்தில் இறந்திருந்தால் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை, எப்.ஐ.ஆர். நகல் உள்ளிட்ட சட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இயற்கை மரணம் என்றால் மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

அதன் பிறகு காப்பீட்டு நிறுவனம் இது குறித்து விசாரணை நடத்தி பணத்தை அளிக்கும். பொதுவாக பாலிசியில் பிரச்சனை இல்லை என்றால் 8 நாட்களுக்குள் விசாரணை முடித்து பணம் அளிக்கப்படும். இல்லை ஏதாவது வில்லங்கங்கள் இருந்தால் 30 நாட்கள் ஆகும். 30 நாட்களுக்கு மேல் இழுத்தடித்தால் கொடுக்க வேண்டிய பணத்துடன் அதற்கான வட்டியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

பணத்தை பெறுபவர்கள் அதை மொத்தமாகவோ அல்லது மாதா மாதம் ஒரு தொகையாகவோ பெறலாம். ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பவர்கள் அதன் விவரத்தையும், ஒரிஜினல் ஆவணம் இருக்கும் இடத்தையும் நியமனதாரர்களிடம் தெரிவிப்பது நல்லது.

No comments: